சீன வானொலியில் தமிழ் கவிஞர்

பிரான்ஸில் இருந்து வெளிவரும் தமிழ் செஞ்சத்தின் டிசம்பர் மாத இதழில் எனது பேட்டி வெளியாகியுள்ளது:- என்னை பேட்டி கண்ட சாரதா சந்தோஷ் அவர்களுக்கும், வெளியிட்டு உதவிய ஆசிரியர் அமின் அவர்களுக்கும் நன்றி..


1. உங்கள் இளமைப் பருவம் பற்றி சொல்லுங்கள்..
தமிழ் நெஞ்சங்களை தமிழால் இணைத்து தமிழால் வளர்த்துதமிழால் உயர்த்திதமிழே எம் உயிர் என்று.. உயர்ந்து நிற்கும் தமிழ்நெஞ்சத்தின் அன்புமிகு ஆசிரியர் குழுவுக்கும் எழுத்து என்ற ஒற்றைப் புள்ளியில் ஓன்றுகூடி தமிழ் என்ற தேர் இழுக்கும் இதழின் அனைத்து ஒத்துழைப்பாளர்களுக்கும் என் மனம் கனிந்த வணக்கம். 
திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூரை பூர்வகமாக கொண்ட நான் 1974ம் ஆண்டு தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்துபள்ளி படிப்பை தூயமரியன்னை மேல்நிலை பள்ளியில் முடித்தேன்உயர் கல்வியில் பி.ஏ. தமிழ் படிக்க ஆர்வம் கொண்டேன். தூத்துக்குடி மாவட்டத்தில் அதற்கான வாய்ப்பில்லாததால் வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பி.ஏ. வரலாறு படித்தேன். எம்.ஏ. தமிழ் அஞ்சல் வழியில் கற்றேன். தொடக்கத்தில் விரும்பிய வேலை கிடைக்காததால் கிடைத்த வேலையை செய்தேன். எல்லோரையும் போல பற்பல தோல்விகள் எனக்குள்ளும்.. தோல்விகளால் புதையுண்டு போகும் போதேல்லாம் மீண்டும் முளைப்பதற்கான வீரியம் என் எண்ணத்துக்குள் நானே விதைத்துக்கொள்கிறேன்.
2. தமிழின் மீது எப்பொழுது ஈடுபாடு ஏற்பட்டது..
பள்ளி பருவத்தில் இருந்தே எழுத்தின் மீது தாகம் கொண்ட எனக்கு வானொலி தான் களம் அமைத்து கொடுத்தது. படிக்கும் போதே சிறுகதைகவிதை என எழுத தொடங்கிய நான்திருநெல்வேலிதூத்துக்குடிஇலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் என பல்வேறு வானொலிகளில் எனது படைப்புக்களை வழங்கியுள்ளேன் என்றாலும் வாழ்க்கை போராட்டத்தில் சிக்கி எழுத்துலகை விட்டு முற்றிலுமாக தொலைந்து போவேனோ என்று எண்ணும் போதெல்லாம் எங்கிருந்தோ ஒரு கவிதை வந்து என்னை தட்டி எழுப்பிவிடும். எழுத்துக்கும் எனக்கும் உள்ள பிணைப்புச் சங்கிலி அறுந்து விடாமல் இன்று வரை என்னை உயிர்ப்போடு இருக்க செய்வது கவிதை மட்டுமே..!
3. உங்களுக்கு பிடித்த இலக்கிய ஆளுமைகள்..
யாரைச் சொல்லி யாரை விட முடியும்.. கம்பனைப் படிஇளங்கோவனைப் படிவள்ளுவனைப் படி,  என எல்லாவற்றையும் பள்ளியில் படிக்கச் சொன்னவர்கள்இதுதான் வாழ்க்கையின் படி என்று சொல்லாமல் ஏனோ விட்டனர்.  ஆனாலும் பாடங்களாய் படிக்க தொடங்கிய எனக்கு.. இவைகள்..பாதைகளை காட்டும் போதுதான் தமிழை காதலிக்க தொடங்கினேன்.. எளிய தமிழில் இனிய கருத்துக்களை எடுத்து இயம்பும் கவியரசர்கண்ணதான்கவிஞர். வைரமுத்துகவிஞர். வாலி,  கவிஞர் முத்துலிங்கம்கவிஞர். பொன்னடியான்கவிஞர் நெல்லை ஜெயந்தா,  கவிஞர். ஜீவன் மயில் என் கவித்தேடலுக்கான தீபச் சுடர்கள்.
4. உங்களின் பார்வையில் #ஒரு கவிதை எப்படி இருக்க வேண்டும்..
கவிதை கவிதையாக இருக்க வேண்டும்.  வாசகனின் நெஞ்சத்தில் ஒரு முள் போல் குத்திசெல்லும் வலிமையும்,  தென்றலென தொட்டுத் தாலாட்டும் இனிமையும்பெற்றிருக்க வேண்டும் என்பதோடு,  வீரத்தைகாதலைஅன்பைபண்பைபண்பாட்டை எல்லாம் கற்றுக் கொடுக்கும் ஆசிரியனாகவும் இருக்க வேண்டும். சமூகத்தின் காலக் கண்ணாடியான கவிதையை கவிஞர் முறையாக கையாளாவிட்டால்.. அது பெரும் பிழையாகிவிடும் என்றே கருதுகிறேன்.. கவிதைக்கு பாரதியைப் போல் ரெளத்திரம் பேசவும் தெரிந்திருக்க வேண்டும். பாமரனைப் போல் கனவுகள் காணவும் தெரிந்திருக்க வேண்டும்.
5. சங்க கால இலக்கியங்களில் உங்களுக்கு பிடித்தது.. மற்றும் ஏன் பிடித்தது..
சிலப்பதிகாரம் பிடிக்கும்... சிலப்பதிகாரம் புகார்க்காண்டம்மதுரைக்காண்டம்வஞ்சிக்காண்டம் என மூன்று காண்டங்களைக் கொண்டது.  மதுரைக் காண்டத்தில் கண்ணகி.  பாண்டிய மன்னனிடம் சென்று,  ‘தேரா மன்னா! என் கால் சிலம்பை விலைபேச முயன்று உன்னால் கொல்லப்பட்ட கோவலன் மனைவி நான். என் சிலம்பு மணிகளை உள்ளீடாகக் கொண்டது’ என வழக்குரைக்கிறாள்.  பாண்டியன் தன் தேவி சிலம்பு முத்துப் பரலை உடையது எனக் கூறிக் கோவலனிடமிருந்து கைப்பற்றப்பட்ட சிலம்பை வரவழைத்துக் கொடுக்கிறான். கண்ணகி சிலம்பை உடைக்கிறாள். அதிலிருந்து மாணிக்கப் பரல் தெறித்து வீழ்கிறது; ‘பொற்கொல்லன் சொல்லைக் கேட்ட யான் அரசன் அல்லன்யானே கள்வன்’ எனக் கூறிப் பாண்டிய மன்னன் உயிர்விடுகிறான்.  பொன் செய் கொல்லன் தன்சொல் கேட்ட யானோ அரசன் யானே கள்வன் - இதுபோல் தவறை ஒப்புக்கொள்ளும் துணிவும் அதற்காக வருந்தும் மனமும் இக்காலத்தில் அரசுக்கோ எந்த அதிகாரிகளுக்குமோ இல்லை என்பதே வேதனை..!

6. நீங்கள் ஒரு பத்ரிகையாளர் என்பதை அறிவேன்.. பத்திரிகை துறையில் நீங்கள் சந்தித்த சவால்கள் என்னென்ன..
பத்திரிகையில் தினந்தினம் பணி செய்வதே சவால்தான்.. சுகமான சுமை என்றுதான் அதை சொல்ல வேண்டும். நிறைய கட்டுரைகள் எழுதி இருக்கிறேன். கவிதைகள் எழுதியுள்ளேன். அதைவிட மிக முக்கியமான ஒன்றுஎனக்கு 24 வயது இருக்கும் போதுகலைச்சோலை என்ற ஒரு காலாண்டு இலக்கிய இதழ் ஒன்றை நானும் எனது நண்பர் தனுஷ்கோடியும் இணைந்து மூன்று ஆண்டுகள் நடத்தினோம். ஓவ்வொரு இதழையும் வெளிக் கொண்டு வருவது என்பதே சாவாலாக இருந்தது. எனினும் அந்த அனுபவமும். தாகமும்தான் என்னை பத்திரிகை உலகில் நுழைய வைத்தது. முதல் முதலாக தூத்துக்குடி தினமலரில் நிருபராக எனது பணியை தொடங்கினேன். சிறுது காலத்திலேயே எனது எழுத்தாற்றலை போற்றிய என் மதிப்பிற்குரியவரான திரு சக்திகுமரன் அவர்கள் என்னை நாகர்கோவில் தினமலரில் தலைமை ஆசிரியராக அமர்த்தி அழகு பார்த்தார்.  அதன்பின் இன்றைய இணைய உலகின் வேகத்திற்கு ஈடுகொடுக்க வேண்டி தினத்தந்தி தினமணி போன்ற நாளிதழ்களின் இணையத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றினேன்.
7. தங்கள் கவிப்பயணம் குறித்தும்..  இதுவரை எத்தனை நூல்கள் வெளியிட்டுள்ளீர்கள்..என்பதை பற்றியும் சொல்லுங்கள் கவிஞரே..
கவிப்பயணம்... என் கவிதைக் குழந்தைகள் பெரும்பாலும் பயணத்தில்தான் பிறக்கின்றன.. பேருந்து ரயில் மற்றும் விமான பயணம் மட்டும் அல்லாது,  இருச்சக்கர வாகனத்தில் அலுவலகம் செல்லும் போதுகூட என் சிந்தையில்.. சில கவிதைகள் எழுந்திருக்கின்றன..  அந்த வார்த்தைகளை பத்திரமாக அடைகாத்து கொண்டுப்போய் முதல் வேலையாக ஏதாவது ஒன்றில் பதிவு செய்து கொள்வேன்... இப்போது முகநூல் பதிவு அதற்கு பெரிதும் உதவியாக உள்ளது.. இதுவரை நான் இரண்டு கவிதை நூல் வெளியிட்டுள்ளேன். முதல் கவிதை நூல் என் காதல் கவிதைகளும் நீயும் பாரதி மோகன் என்ற பெயரில் இந்த கவிதைத் தொகுப்பை வெளியிட்டேன். பாரதி மோகன் என்ற பெயரில் திரைத்துரையில் பலர் இருப்பதாக கவிஞர் பொன்னடியான்  கூறியதால் என் இயற்பெயரான சோமசுந்தரம் என்பதை,  சுருக்கி என் தந்தை  பெயரை சேர்த்து திருமலை சோமுவாக எழுத தொடங்கினே. இந்த பெயர் மாற்றத்திற்கு பிறகு வெளிவந்த நூல் மனசுக்குள் பெய்யும் நூல்கவிஞர் முத்துலிங்கம் அவர்கள் இதற்கு அணிந்துரை வழங்கியுள்ளதோடுஅதை வெளியிட்டு பெருமை சேர்த்துக் கொடுத்தார். தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன் அவர்கள் இந்நூல் வெளியீட்டுக்கு பெரிதும் உதவிமுன்னின்று நடத்திநூலைப் பெற்றுக் கொண்டதோடுகலாரசிகன் பகுதியில் பெரும் அங்கிகாரம் கொடுத்தார்... இந்நூலில் இடம் பெற்ற,
எல்லாப் பாவங்களையும் தொலைக்க
நதிகளில் நீராடச் சொன்னார்கள்
நதிகளை தொலைத்த பாவத்தை
எப்படித் தீர்ப்பது! - என்ற இந்த கவிதை பெரும் வரவேற்பை பெற்றது.
கவிதை எழுத தெரிந்த எல்லோருக்கும் பாடல் மேல் தீராத காதல் இருக்கும். . அந்த வகையில் திரைப்பாடல் எழுத வேண்டும் என்ற என் தேடலுக்கு தகுந்த வாய்ப்பு கொடுத்த இயக்குநர் ஏ.ஆர்.கே. ராஜராஜா அவர்களையும் இங்கே நான்சொல்ல கடமைப் பட்டுள்ளேன்.. மொழிப் மாற்றுப் படங்களான எவண்டாபிரபாஸ்பாகுபலி,  அனிருத் போன்ற படங்களில் பாடல் எழுதியுள்ளேன்.  மேலும் கவிஞரும் இசையமைப்பாளருமான ஜீவன் மயில் அவர்கள் இசையில் புலிக்கொடி தேவன் என்ற நேரடித் தமிழ்ப் படத்திலும் பாடல் எழுதியுள்ளேன். இசையமைப்பாளர் தஷி அவர்களின் இசையில் திருச்செந்தூர் முருகன்ஷீரடி சாய்பாபாஆல்பங்களில் பக்திப் பாடல்கள் என என் கவிப்பயணம் தொடர்கிறது...
8. தமிழுக்காக செய்த நற்பணிகள் சிலவற்றை கூறலாமே..
கலைச்சோலை சிற்றிதழ் மூலம் ஏராளமான புதிய படைப்பாளிகளை உருவாக்கியுள்ளேன். பின்னர் தினசரி பத்திரிகை பணிக்கு வந்த பின்னும் எழுத்தார்வம் கொண்டவர்களுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளேன். தினமணி இணையத்தில் கவிதை மணி என்று சிறப்பு பக்கம் தொடங்கி புதிய புதிய கவிஞர்களை வாரம் தோறும் அறிமுகப்படுத்தி வந்தேன். நல்ல தமிழ் சொற்களை பேசுவதும்கலப்பில்லாமல் மொழியை காப்பதுமே இன்றைய முக்கிய தேவையாக இருக்கிறது.. இளைய தலைமுறையினர் எத்தனை மொழிகளை கற்றுக் கொண்டாலும்தமிழ் நம் அடையாளம் என்பதை மறக்காமல் இருக்க வேண்டும் என்றே சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
9. தற்சமயம் நீங்கள் என்ன செய்கிறீர்கள்..
தற்போது நான் சீன வானொலியின் தமிழ்ப் பிரிவில் பணியாற்றுகிறேன்..  சீனாவின் பண்பாடுகலைகலாச்சாரம்இலக்கியம்உணவு முறைவாழ்க்கை நெறி எல்லாவற்றையும் தமிழர்கள் அறிய வேண்டியது அவசியம்.  சீனாவுக்கும் தமிழர்களுக்குமான தொடர்பு பண்டைய காலத்தில்  வாணிபம் மூலம்  பல்கி பெருகி வந்தது. இன்றும் அதன் பணியை வானொலி ஒரு தொண்டாக செய்து வருகிறது.  சீன வானொலி நிலையத்தின் தமிழ் ஒலிபரப்பு 1963 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 1 ஆம் நாள் துவங்கியது. இந்த வானொலியில்15 சீனர்கள் தமிழ்கற்று தெளிந்து பணியாற்றுகிறார்கள்.. என்னையும் சேர்ந்து மூன்று தமிழர்களும் இங்கு பணியாற்றுகிறோம்.  54 ஆண்டுக்கால வளர்ச்சி மூலம்சீன வானொலி நேயர்கள்இந்தியாஇலங்கைசிங்கப்பூர்மலேசியாசெளதி அரோபியாஅமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில்பரவியுள்ளனர். சீன வானொலியின் தமிழ்ப் பிரிவின்  தற்போதைய தலைவர் திருமதி கலைமகள்.  அவர்கள்  தலைமையில் சிறப்பாக இயங்கி வரும் சீன வானொலிசீனாவின் வளர்ச்சி,  சர்வதேச அரங்கில் சீனாவின் முன்னேற்றம்மற்றும் பண்பாடு கலாச்சாரம் பற்றி  உலக தமிழர்களிடையே பரப்பி வருகிறது.  சீனர்கள் ஆர்வமாக தமிழ் கற்று தமிழ் ஒலிபரப்பு சேவையை வழங்குவது என்பது மிகப்பெரிய விசயம் தமிழ்நாட்டில் இதற்கு மிகுந்த வரவேற்பு உள்ளது.  சீன வானொலி தற்போது தொழில்நுடப வளர்ச்சிக்கேற்ப செல்போன் செயலியிலும் கேட்க முடிகிறது. 
10. சீனாவில்  தமிழர்களை குறித்த ஓரிரு வரிகள்..
தமிழர்கள் உலகம் முழுவதும் பரந்து விரிந்து உள்ளனர். சீனாவிலும் லட்சக்கணக்கான தமிழர்கள் வசிக்கிறார்கள். பல்வேறு பணி நிமித்தமாகவும்தொழில் நிமித்தமாகவும் மட்டுமல்லாமல் கல்வி கற்கவும் மாணவ மாணவியர்கள் இங்கு வருகிறார்கள்.. ஷாங்காய்பெய்ஜிங் போன்ற மாநகரங்களில் தமிழ் அமைப்புகளும்  செயல்படுகின்றன.
11. மரபுக் கவிதைகள் குறித்த உங்கள் நிலைபாடு..
நதியின் பயணம் போன்றது.... திட்டமிட்டுக் கட்டப்படும் பாலம் அதுமரபு என்பது எல்லாவற்றுக்கும் அவசியம்தான்.. கவிதைக்கு அது மணிமகுடம்.
12.  வாழ்க்கை இலட்சியமாக கருதுவது..
மொழி ஆளுமைகளின் குறிப்பிடத்தகுந்த பட்டியலில்  நான் இடம்பெற வேண்டும். எழுத்து... கவிதை. என் அடையாளமாக இருக்க வேண்டும். அதைத் தாண்டி பெரிதாக நான் எதையும் யோசிக்கவில்லை.
13. இன்னும் பத்தாண்டுகளில் நீங்கள் என்னவாக விரும்புகிறீர்கள்..
தமிழை சுவாசித்துக் கொண்டிருப்பேன்..  என்னை தேடி வரும் எந்த ஒரு வாய்ப்பையும்.. தவறவிடாமல் பயன்படுத்தி வருகிறேன் அதைத்தாண்டி,, நான் எனக்கான தேடல்களிலும் பயணிக்கிறேன்... நூல்கள் அதிகமாக எழுதுதவேண்டும் என்பதும்.. எனது படைப்புகள் பல்கலைக்கழகங்களில் பாட நூலாக வரவேண்டும் என்பதும் என் மிகுந்த விருப்பம். அதை நோக்கி பயணிப்பதோடு அதற்கான இலக்கையும் எட்டுவேன் என்று நம்புகிறேன்.  
14.  வளர்ந்து வரும் கவிஞர்களுக்காக  தமிழகம் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து..?!

பெரும்பாலும் கவிஞர்கள் கல்லூரிகளில் பிறக்கிறார்கள்.. எழுத்து ஆர்வம் பிறக்கின்ற இடத்தில் ஊக்குவிக்கப்பட வேண்டும்.  நிறைய கவிஞர்கள் அமைப்பு ரீதியாக இயங்கி கொண்டிருக்கிறார்கள்.. கவிதை சமூகம் சார்ந்ததாக இருக்க வேண்டும். சிறந்த கவிதையையும் கவிஞர்களையும் உலகுக்கு அடையாளப்படுத்த உலகத்தமிழ்ச்சங்கம் மூலம் அடிக்கடி போட்டிகள் நடத்தலாம் என்பது என் கருத்து!
`எழுதுங்கள்.. எழுதுங்கள்.. எழுதுங்கள்.. 

தமிழ்நெஞ்சம் நேர்காணலில் பங்கு பெற்று.. தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்தமைக்கு நன்றியும்.. வாழ்த்துகளும்..  கவிஞர் திருமலை சோமு அவர்களே..
நன்றி வணக்கம்!










0 Comments: