ரகசியம் என்பது ஒருவருக்கு மட்டுமே தெரிந்த ஒன்றாக இருக்கும் வரையில்தான் அது ரகசியமாக பேணப்படும்.
எந்த ஒரு விசயமும் இன்னொருவருடன் பகிர்ந்து கொள்ளப்படும்போது அது ரகசியமாக இருப்பதற்கான உத்தரவாதத்தை இழந்து விடுகிறது. அதுபோல் தான் கிசு கிசு பேசுவதும்.
எந்த ஒரு விசயமும் இன்னொருவருடன் பகிர்ந்து கொள்ளப்படும்போது அது ரகசியமாக இருப்பதற்கான உத்தரவாதத்தை இழந்து விடுகிறது. அதுபோல் தான் கிசு கிசு பேசுவதும்.
மற்றவர்களை பற்றிய ரகசியங்களை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவதில் நமக்கு நிகர் நாமேதான். அதிலும் சினிமா நட்சத்திரம் போன்ற பிரபலங்கள் பற்றி ஏதேனும் கிசு கிசு வந்துவிட்டால் போதும் அதில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி எல்லாம் ஆராயாமல் காட்டுத் தீபோல் அது பரவத் தொடங்கிவிடும்.
இதுபோல் கிராமப்புறங்களில் அடுத்த வீட்டு சங்கதிகளை பொழுதுபோக்காக கிசுகிசு பேசிக் கொண்டிருப்பதையும் கேட்டிருப்போம். இந்த கிசு கிசு பேச்சுக்களால் யாருக்கும் எந்த பயனும் இருப்பதில்லை. ஆனாலும் அது ஒரு பழக்கமாகவே நம்மில் பலரிடம் ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதனால் வரும் பின் விளைவுகளை பற்றி கூட கவலைப்படாமல் கிசு கிசு பேசுவதுதான் துயரத்திலும் துயரம்.
குறிப்பாக அலுவலகங்களில் தேவையில்லாமல் இதுபோல் கிசு கிசு பேசுவதினால் என்னென்ன பிரச்னைகள் ஏற்படுகிறது, அதை எவ்வாறு நாம் தவிர்க்கலாம் என்பது பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.
அலுவலகத்தில் பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கும் போது கூட டீக்கு நடுவில் கொஞ்சம் பிஸ்கட் கடித்துக் கொள்வது போல் நாவில் பல் படாமல் அடுத்தவர் பற்றிய சின்னதாய் ஒரு விசயத்தை சொல்லிவிட்டு ஏதும் அறியாமல் இருப்பவர் போல் நடந்து கொள்பவர் நம்மிடையே பலர் இருக்கக்கூடும்.
அவ்வாறு பேசி விட்டுப்போகும் நபர்களிடம் நாம் எவ்வாறு எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும், அலுவலகத்தில் இந்த கிசு கிசு பேச்சுக்களை எப்படியெல்லாம்,தவிர்க்கலாம் எனபதற்கான 10 யோசனைகள் உங்களுக்காக: -
1. முன்மாதிரியாக இருங்கள்
நீங்கள் உங்கள் அலுவலகத்தில் தலைமைப் பொறுப்பிலோ அல்லது மேலாளராகவோ இருப்பீர்கள். ஆனால் உங்களுக்கு கீழ் இருப்பவர்கள் கிசு கிசு பேசாமல் இருக்க முதலில் உங்களிடம் இருந்து அதை தொடங்குங்கள்.
2. பிரச்னைகளை காதுகொடுத்து கேளுங்கள்
உங்களுக்கு கீழ் பணியாற்றுபவர்கள் உங்களிடம் கொண்டுவரும் பிரச்னைகளை முதலில் முழுவதுமாக காதுகொடுத்து கேளுங்கள். உங்களால் அவர்களின் பிரச்னைகளை தீர்க்க முடியாது என்று அவர்கள் நினைத்துவிட்டால் அவர்கள் உங்களைப் பற்றியே கிசு கிசு பேச தொடங்கி விடுவார்கள்.
3. தொடர்பில் இருங்கள்
பணியாளர்கள் கொடுக்கும் புகார்களை தீர விசாரித்து தீர்வு சொல்வதோடு நின்று விடாமல் அதைப்பற்றி அடிக்கடி விசாரித்து அந்த பிரச்னை சரியாகிவிட்டதா என்பதை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். அதில் ஒரு வெளிப்படைத் தன்மை இருக்க வேண்டும் என்பதையே அவர்கள் விரும்புவார்கள்.
4. எதிர்மறை நடவடிக்கையை தவிர்க்க வேண்டும்
ஒரு குறிப்பிட்ட பிரச்னையைப் பற்றி உங்கள் பணியாளர்கள் கவலையடைந்திருந்தால், அதை நீங்கள் அவர்களோடு பேசி தெரிந்து கொள்ள வேண்டும். கெட்ட செய்தியை யாரும் விரும்புவதில்லை. குறிப்பிட்ட பிரச்னை குறித்த கிசு கிசுவை தவிர்க்க, கிசு கிசு பேசுபவரை கண்டு பிடிக்க வேண்டும். எனினும் அந்த நபர் மீது எதிர்மறையான நடவடிக்கை எடுக்க கூடாது. அவ்வாறு எடுத்தால் அந்த கிசு கிசு அதிகமாகத்தான் செய்யுமே தவிர அது குறைவதற்கான வாய்ப்பு இல்லை.
5. வதந்தியை எதிர்கொள்ளுங்கள்
உங்களைப் பற்றி பரப்பப்படும் வதந்திகளுக்கு நீங்கள் எதிர்விணை ஆற்றக் கூடாது. அவ்வாறு செய்தால் அது மேலும் கிசு கிசு பேசுவதற்கு வழிவகுத்து விடும். அலுவலகத்தில் வதந்தி பேசுவதனால் எந்தவித பயனும் ஏற்படப்போவதில்லை. கிசு கிசு பேசுபவர்கள் அதை நிறுத்தப் போவதும் இல்லை. வதந்திகளுக்கு காது கொடுத்து நீங்கள் விணையாற்றினால் அது மேலும் பரவும். கிசு கிசு பேசுவோர்களின் வட்டம் விரிவடையும்.
6. பிரச்னையை கையாளுங்கள், பிரச்னைக்குரியவரை அல்ல
உங்களைப் பற்றி வதந்தி பரப்புபவர் யார் என்று நீங்கள் கண்டுபிடித்து விட்டால் அவர் மீது கோபப்படுவதையோ நடவடிக்கை எடுப்பதையோ தவிர்த்து அவர் எந்த பிரச்னை குறித்து கிசு கிசு பேசுகிறார், வதந்தி பரப்புகிறார் என்பதை உணர்ந்து அந்த நபரிடம் குறிப்பிட்ட பிரச்னையை சரி செய்து விடுவதாக சொல்லுங்கள். இவ்வாறு செய்தால் உங்களை திறமையான அதிகாரியாக அது அடையாளம் காட்டும்.
7. அறையில் இல்லாதவர்கள் பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும்
வதந்திகளை நிறுத்துவதற்கான ஒரு நல்ல வழி என்னவென்றால் சபையில் இல்லாத நபர்களைப் பற்றிய எந்த கருத்துக்கும் காதுகொடுக்காமல் இருப்பதோடு அதற்கு பதில் அளிக்காமலும் இருக்க வேண்டும். முடிந்தவரை அதைவிடுத்து பொதுவான விசயங்களை நாம் பேசலாம். ஒரு முறை இதை செய்து பாருங்கள் உங்களிடத்தில் கிசு கிசு பேசுபவர் தானாக மாறிவிடுவார்.
8. தீர விசாரிப்பது நல்லது
உங்களால் வதந்திகளை நிறுத்த முடியவில்லை என்றாலோ பேச்சை மாற்றி கிசு கிசுவை தவிர்க்க முடியவில்லை என்று நீங்கள் நினைத்தாலோ குறைந்தபட்சம் உங்கள் காதுகளுக்கு வரும் தகவல்களின் உண்மை தன்மையை தீர விசாரித்துக் தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக பேசப்படும் வதந்திகளுக்கு எந்த ஆதாரமும் இருப்பதில்லை. எனவே தீர விசாரிக்க வேண்டியது அவசியமாகிறது. அவ்வாறு விசாரிப்பதன் மூலம் ஆதாரமற்ற எதையும் நீங்கள் நம்புபவர் இல்லை என்பதையும் தெளிவுப் படுத்திவிடுகிறீர்கள்.
9. தீர்வுகளில் கவனம் செலுத்துங்கள் பிரச்னைகளில் அல்ல
பொதுவாக, குழுவாக இயங்க கூடிய இடங்களில்தான் ஏதேனும் ஒரு பிரச்னையைப் பற்றி பேசும் போது அதிகமான கிசுகிசு எழுகிறது. குழு உரையாடலின் போது பேசப்படும் விசயம் வதந்தி அல்லது கிசு கிசு என்று நீங்கள் கருதினால், இருளை சபிப்பதை விட மெழுவர்த்தி ஏற்றுவது நல்லது என்ற பழைய பழமொழியை நினைவில் கொண்டு செயல்படுங்கள். அதாவது மற்றவர்களைப் போல் நீங்களும் கிசு கிசு பேசுவதை விடுத்து பிரச்னைக்கு உரிய தீர்வை யாராவது கண்டுபிடித்தீர்களா என கேளுங்கள். வதந்தி பேசுபவர்களால் தீர்வு சொல்ல முடியாது. தீர்வுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தால் வதந்தி உங்களை விட்டு விலகும்.
10. தற்பெருமை கொள்ளாதீர்கள்
வதந்திகளை தவிர்க்க நீங்கள் செய்யும் விசயங்களை எல்லா நேரங்களிலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். அமைதியான முறையில் உங்கள் வேலையை செய்யுங்கள். இந்த முறையை கையாண்டால் வதந்தி பரவுவதையும் கிசு கிசு பேசுவதையும் தடுக்கலாம். இதனால் உங்கள் சக பணியாளர்கள் முழுமையான திறமையுடன் வேலையும் வாய்ப்பு உருவாகும். கிசு கிசு மற்றும் வதந்தி பேசுவதை கண்டும் காணாமல் இருந்துவிடால் அது நாளடைவில் தானாக சரியாகிவிடுவதோடு மேலும் உங்களைப் பற்றிய வதந்திகள் எழாமலும் தடுக்கப்படும்.
வதந்திகள் மிகவும் ஆபத்தானவை என்றாலும் அதைவிட வதந்தி பரப்புபவர்களும் கிசுகிசு பேசுபவர்களும் ஆபத்தானவர்கள். இந்த ஆபத்தையும் ஆபத்தானவர்களையும் கடந்துதான் நாம் வென்றாக வேண்டிய நிர்பந்தம் உள்ளது. எந்த ஒரு இக்கட்டான விசயத்தையும் நாம் இலகுவாக கையாள தெரிந்து கொண்டால் வெற்றி நமதே.. கிசு கிசுவை ஒழிப்போம்.. விறுவிறுவென செழிப்போம்..!
தினமணியின் - இளைஞர் மணிக்கு எழுதிய கட்டுரை
- திருமலை சோமு
0 Comments:
Post a Comment