“எல்லாப் / பாவங்களையும் தொலைக்க
நதியில் நீராடச் சொன்னார்கள்
நதிகளைத் தொலைத்த / பாவத்தை
எப்படித் தீர்ப்பது?” எனப் பொட்டில் அடித்தாற் போல் கேட்கும் இக் குறுங்கவிதையின் வாயிலாக இலக்கிய ஆர்வலர்களின் உள்ளங்களை எல்லாம் தம்பால் ஈர்த்தவர்
திருமலை சோமு (கலா ரசிகன், ‘இந்த வாரம்’, தினமணி: தமிழ்மணி, 10.06.2018, ப.8). ‘தினமணி’ இணைய தளத்தில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வரும் அவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘என் காதல் கவிதைகளும் நீயும்’ (2010) என்பது. “முதல் தொகுப்பில் பாரதி மோகனாக உங்களுக்கு அறிமுகமான நான், இப்போது சோமசுந்தரம் என்ற எனது இயற்பெயருடன் தந்தை பெயரைச் சேர்த்து திருமலை சோமுவாக ‘மனசுக்குள் பெய்யும் மழை’ என்ற இந்த நூலில் உங்களோடு கை குலுக்குகிறேன். பொதுவாக இயற்பெயரை மாற்றி புனைபெயர் வைத்துக் கொள்வது உண்டு. நான் அதில் இருந்து சற்று மாறுபட்டுப் புனைபெயரில் இருந்து இயற்பெயருக்குத் திரும்புகிறேன். பெயரை விட என் எழுத்தை நீங்கள் நேசிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” (‘கவிதை நெஞ்சங்களுக்கு வணக்கம்’, மனசுக்குள் பெய்யும் மழை, ப.12) என்னும் முன்னுரைக் குறிப்பு வித்தியாசமான சிந்தனைக்குச் சொந்தக்காரர் திருமலை சோமு என்பதற்குக் கட்டியம் கூறும்.
திருமலை சோமு (கலா ரசிகன், ‘இந்த வாரம்’, தினமணி: தமிழ்மணி, 10.06.2018, ப.8). ‘தினமணி’ இணைய தளத்தில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வரும் அவரது முதல் கவிதைத் தொகுப்பு ‘என் காதல் கவிதைகளும் நீயும்’ (2010) என்பது. “முதல் தொகுப்பில் பாரதி மோகனாக உங்களுக்கு அறிமுகமான நான், இப்போது சோமசுந்தரம் என்ற எனது இயற்பெயருடன் தந்தை பெயரைச் சேர்த்து திருமலை சோமுவாக ‘மனசுக்குள் பெய்யும் மழை’ என்ற இந்த நூலில் உங்களோடு கை குலுக்குகிறேன். பொதுவாக இயற்பெயரை மாற்றி புனைபெயர் வைத்துக் கொள்வது உண்டு. நான் அதில் இருந்து சற்று மாறுபட்டுப் புனைபெயரில் இருந்து இயற்பெயருக்குத் திரும்புகிறேன். பெயரை விட என் எழுத்தை நீங்கள் நேசிக்க வேண்டும் என்பதே என் விருப்பம்” (‘கவிதை நெஞ்சங்களுக்கு வணக்கம்’, மனசுக்குள் பெய்யும் மழை, ப.12) என்னும் முன்னுரைக் குறிப்பு வித்தியாசமான சிந்தனைக்குச் சொந்தக்காரர் திருமலை சோமு என்பதற்குக் கட்டியம் கூறும்.
மழையும் மழை சார்ந்த பகுப்பும்
கவிதைத் தொகுப்பின் தலைப்புக்கு ஏற்ப, தூறல், மழை, சாரல் என முப்பெரும் பிரிவுகளாகப் பகுக்கப் பெற்றிருப்பது சிறப்பு; ‘மழையையும் / மனித மனங்களையும் / நேசிக்கும் நெஞ்சங்களுக்கு’ இத் தொகுப்பு காணிக்கையாக்கப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
“வானம் பூமிக்கு / அருளிய கொடை / மழை!
மனிதா நடுவில் / நீ ஏன் பிடிக்கணும் / குடை?” (ப.17)
என மழையின் பெருமையை நயத்தக்க நகைச்சுவை உணர்வோடு பேசும் கவிஞர், புயல் மழையால் ஏழை எளிய மக்களும் அன்றாடங்காய்ச்சிகளும் அனுபவிக்க நேரும் அவதியையும் குறிப்பிடத் தவறவில்லை.
“எல்லோருக்கும் பிடிக்கும் / என்றாலும்
நடைபாதை வியாபாரிகளும் / வீதியோரவாசிகளும்
பொறுத்திருக்க முடியுமோ?
புயல் மழையாய் / வந்து போகும் உன்னை” (ப.16)
என்னும் கவிதை இவ் வகையில் கருதத் தக்கதாகும்.
“மொட்டை மாடியில் / வெயிலில் காயும்
பூந்தொட்டிக்கு / வரமென வந்தது
கோடை மழை” (ப.19)
என மொட்டை மாடியில் வெயிலில் காயும் பூந்தொட்டிக்கு வரமென வருகை தரும் கோடை மழை குறித்தும் ஒரு கவிதை படைத்துள்ளார் கவிஞர்.
‘மழை நேசன்’
ஒரு கவிஞர் என்ற முறையில் திருமலை சோமுவின் உள்ளத்தில் மழைக்கு என்று தனி இடம் உள்ளது. பள்ளிகூடத்துக் கூரையில் / மரத்தின் இலைகளில் / பேருந்தின் சன்னலில் என / துளித்துளியாய் நான் ரசித்த மழை’ (ப.21) என உளமார மழையைக் குறிப்பிடும் கவிஞர் உள்ளன்போடு, ‘என் செல்ல மழைக்கு…’ என விளித்துக் கடித வடிவில், ‘மனசுக்குள் பெய்த மழை’ என்னும் தலைப்பில் பதினேழு பக்க அளவில் (பக்.26-42) ஒரு நீண்ட கவிதையைப் பாடுகின்றார். ‘மழையில் நனைந்து ஆனந்தம் கொள்ள’ விழையும் கவிஞர்,
“ஓ… மழையே!
நீ என்னில் விழுந்து / மண்ணில் கரைந்தாலும்
நான் உன்னில் கலந்து / உயிரில் உறைகிறேன்”
என உருக்கமாகக் குறிப்பிடுகின்றார்; மழையுடனான தமது இருப்பினைச் ‘சுக அனுபவம்’ எனச் சுட்டுகின்றார். மழையை ரசிக்கவும், மழையில் நனையவும் யாருக்கும் இப்போது நேரம் இல்லை! வனங்களை எல்லாம் அழித்து, வாழ்வுக்கு வழி தேடிக் கொண்ட மனிதர்களுக்கு ‘மழைத்துளி உயிர்த்துளி’ என்பதும் ஏனோ மறந்து போய்விட்டது! இந் நிலையில்,
“காடு அழித்து / நாடு கண்ட
எங்களுக்கு / மீண்டும்
காடு சமைக்க முடியவில்லை”
என்றாலும்,
“சிலிர்ப்பதற்கும் / சிலாகிப்பதற்கும் மட்டுமல்ல
ஜீவிப்பதற்கும் – என்றும் / நீ வேண்டும்!”
எனச் செல்ல மழையிடம் வேண்டுகோள் விடுக்கின்றார் கவிஞர். முத்தாய்ப்பாக,
“என் செல்ல மழையே / நீயே என் உயிர் ஆனதால்
பயிர் வளர்க்கும் உன்னால் / நானே உயிர் வளர்க்கின்றேன்” (ப.41)
என ஒப்புதல் வாக்குமூலம் வழங்குகின்றார் கவிஞர்.
நல்லதோர் தமிழ் செய்து அதை நலங்கெட விடலாகுமோ?
“நல்லதோர் வீணை செய்தே – அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?”
என வினவுவார் கவியரசர் பாரதியார். அவரது வாக்கினை அடியொற்றி திருமலை நம்பியும் ‘நல்லதோர் வீணை’ என்னும் தலைப்பில் ஒரு கவிதை படைத்துள்ளார். அதில் அவர்,
“நல்லதோர் தமிழ் செய்து – அதை
நலங்கெட நாமும் / வீதியில் விடலாகுமோ?”
எனத் தமிழ் மக்களுக்குப் பொருள் பொதிந்த கேள்விக் கணையினைத் தொடுத்துள்ளார்.
1. முச்சங்கம், நாற்சங்கம் என, வீதியெங்கும் சங்கம் வைத்து, முத்தமிழ் போற்றி, இயல் இசை நாடகம் வளர்த்தவர்கள் நாம்!
2. தங்கத் தமிழ் எங்கள் வாழ்வென்றும், மூச்சென்றும், பேச்சென்றும், மங்காத பொருள் என்றும், சங்கெடுத்து முழங்கியவர்கள் நாம்!
இங்ஙனம் உரிய வகையில் தமிழை வளர்த்தும், உணர்ச்சி பொங்கத் தமிழின் உயர்வை முழங்கியும் வந்த நாம் இன்று ஏனோ –
“பேச்சில், வழக்கில் / பள்ளிப் பாட ஏட்டில்
திசை இசைப் பாட்டில் / தமிழர்தம் பெயரினில் என
அனைத்திலும் மெல்லத் தமிழினி / சாகும் வகை செய்தோம்!”
இவ்விழி நிலையை நினைந்து வருந்தும் கவிஞர்,
“நல்லதோர் தமிழ் செய்து – அதை
நலங்கெட நாமும் / வீதியில் விடலாகுமோ?” (ப.66)
என நெஞ்சு பொறுக்காமல் கேட்பது பயில்வார் உள்ளத்தைத் தொடுவதாகும்.
இளைய தலைமுறையே, ‘உறுதியாய் இரு…!’
இன்றைய இளைய தலைமுறைக்குக் கவிஞர் திருமலை சோமு வலியுறுத்தும் இரத்தினச் சுருக்கமான செய்தி இதுதான்: ‘உறுதியாய் இரு…!’ ‘இலட்சியத்தில், கொண்ட கொள்கையில் உறுதியாய் இரு’ என இளையோர்க்குக் கூறும் கவிஞர், ‘உலகாளும் எண்ணமானாலும் / ஒரு நாளும் துவளாது / உறுதியாய் இரு!’ என அறிவுறுத்துகிறார்; ‘நேற்று வரை திசை மாறியே வீசிய காற்று / நாளை உன் பக்கம் வீசக்கூடும்; / தேதிகள் கிழிக்கப்படும் போது / யாரும் அறிவதில்லை / அடுத்த நொடியின் நிகழ்வை!’ என எடுத்துரைக்கிறார். என்றாலும்,
“நடப்பதனைத்தும் நம்பிக்கையின் / அடிப்படையில் தான்!” (ப.52)
என்பதால், நம்பிக்கையோடு இருக்குமாறும் இமைப்பொழுதும் சோராது செயல்படுமாறும் உறுதியாய் அறுதியிட்டு உரைக்கிறார் கவிஞர்.
ஒளிந்திருக்கும் நற்குணம் தேடிப் பார்!
“குணம் நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகை நாடி மிக்க கொளல்” (504)
என அறிவுறுத்தினார் வள்ளுவர் பெருமான். ஆனால் இன்றைய மனிதனோ தன்னை அறியாமல் – தன்னிடம் இருக்கும் குறையும் குற்றமும் குறித்துச் சற்றும் உணராமல் – அடுத்தர் பேச்சில், செயலில், நடவடிக்கைகளில் குறையும் குற்றமும் மட்டுமே காணும் – அவற்றைக் கண், காது, மூக்கு வைத்து பெரிது படுத்திப் பேசும் – மனப்பாங்கினைப் பெற்றிருக்கிறான்.
அருளாளர்களின் நோக்கில் தன்னை அறிவதே ஆன்மிக வாழ்வின் முதற்படி; அடிப்படை. கிரேக்கப் பேரறிஞர் சாக்ரட்டீ]{ம் ‘உன்னை நீ அறிவாய்!’ (Know Theyself) என மொழிவது ஈண்டு நினைவுகூரத்தக்கது.
‘தன்னை அறிந்தவன் – வெறும் மனிதன் இல்லை!’ என மொழியும் கவிஞர். ‘குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை’ என்ற மேலோர் வாக்கினையும் நினைவுபடுத்துகின்றார். மேலும் அவர், ‘சுற்றும் முற்றும் பார்த்தாலும், குற்றம் காணாத குணம் எங்கும் இல்லை!’ என நடைமுறை உண்மையை எடுத்துக்-காட்டுவதோடு நின்று விடாமல்,
“நிறைந்திருக்கும் குற்றங்களுக்கு / இடையில் ஒளிந்திருக்கும் ஒரு
நற்குணம் தேடிப்பார்!” (ப.72)
என மனிதனுக்கு அறிவுறுத்துவது மனங்கொளத்தக்கது.
நூற்றுக்கு நூறு உயர்குணங்களே பெற்றவரும், முழுக்க முழுக்கக் குற்றங் குறைகளே கொண்டவரும் என எவரும் இவ்வுலகில் இல்லை. தேடிப் பார்த்தால், நிறைந்திருக்கும் குற்றங்களுக்கு இடையில் ஒரு நற்குணமாவது மனித மனத்தில் ஒளிந்திருக்கும், அதைக் கண்டறிந்து, அதற்காகவாவது அம் மனிதனைப் போற்றுவதே வாழும் முறைமை ஆகும் என்பது கவிஞரின் கருத்து.
சிறுமனம் படைத்த மானுடர்களுக்கு இடையில் வாழ்தல் பெரிது!
ஔவை மூதாட்டியிடம் முருகப் பெருமான் கேட்டது போல் ‘கவிஞரே பெரியது எது?’ எனக் கேட்டால் அதற்குக் கவிஞர் திருமலை சோமு தரும் விடை சுவையானது; நயமானது.
“நீந்தத் தெரிந்த பறவை நான்
சிறகொடிந்த போதெல்லாம் / தண்ணீரில் நீந்திப் பிழைக்கிறேன்
நீரில் மூச்சிறைக்கும் போது / தரையில் தப்பிக்கிறேன்
தரையில் தடைகள் வந்தாலும் / மீண்டும் சிறகு விரிக்கிறேன்”
எனத் தம்மை ஒரு பறவையாக உருவகம் செய்து கொள்ளும் கவிஞர், வாழ்வில் அவ்வப்போது எதிர்கொள்ள நேரும் சோதனைகளையும் வேதனைகளையும் தடைகளையும் தடந்தோளின் துணையுடன் சாதனைகளாக மாற்றிக் காட்டும் வல்லமையை உளமாரப் போற்றிப் பாடுகின்றார். மேலும்,
“வானம் பெரிது, நிலம் பெரிது
கடல் பெரிது – இந்த
சிறுமனம் படைத்த / மானுடர்களுக்கு இடையில்
வாழ்தலும் பெரிது!” (ப.24)
என நடப்பியல் பாங்கில் உள்ளது உள்ளபடி எடுத்துரைக்கின்றார். சிறுமனம் / வாழ்தல் பெரிது: அழகிய முரணின் ஆட்சி! கவிஞரைப் பொறுத்த வரையில், சிறுமனம் படைத்த மனிதர்களுக்கு இடையே வாழ்வது கூடப் பெரிதுதான்!
அழகான மனங்களின் சில அழுக்கான பக்கங்கள்
“அரியகற்று ஆசுஅற்றார் கண்ணும் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு” (503)
என்பது வள்ளுவர் வாக்கு. ‘அரிய நூல்களைக் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்து பார்க்கும் இடத்தில் அறியாமை இல்லாது இருப்பது அருமையாகும்’ என்பது இக் குறட்பாவின் தெளிவுரை. நெல்லுக்கு உமி உண்டு, நீருக்கு நுரை உண்டு, நிலவுக்குக் களங்கம் உண்டு, புல்லிதழ் பூவுக்கும் உண்டு. அது போல, மெத்தப் படித்த மேதைகளிடமும் சில அழுக்கான – வேண்டாத – பக்கங்கள் உண்டு; பழக்கங்கள் உண்டு. இவ்வுண்மையினை உணர்த்தும் வகையில் தம் கவிதை ஒன்றில்,
“எல்லோருக்குள்ளும் / சில அழுக்கான பக்கங்கள் உண்டு
அதை ஒளித்து விட்டுத்தான் / ஒளிர்ந்து கொண்டு இருக்கிறோம்
நிலவின் வெளிச்சம் போல்…!” (ப.92)
என்கிறார் கவிஞர். ஒளித்து விட்டுத்தான் x ஒளிர்ந்து கொண்டு இருக்கிறோம்: நல்ல சொல் விளையாட்டு! ‘நிலவின் வெளிச்சம் போல்’ எனக் கவிஞர் இங்கே கையாண்டிருக்கும் உவமை மிகவும் பொருத்தமான ஒன்று.
‘இறைவன் எழுதிய வாழ்க்கை எனும் புத்தகத்தின் கடைசிப் பக்கம்!’
தத்துவ நோக்கில் மரணம் பற்றிய தம் ஆழமான சிந்தனைகளை இரு கவிதைகளில் வெளியிட்டுள்ளார் திருமலை சோமு. அவரது கண்ணோட்டத்தில் மரணம் என்பது ‘இறைவன் எழுதிய / வாழ்க்கை எனும் / புத்தகத்தின் / கடைசிப் பக்கம்’. இதில் வேடிக்கை என்ன என்றால், கவிஞரே கூறுவது போல்,
“நாம் எல்லோரும்
கண்ணதாசன் எழுதிய / கடைசிப் பக்கத்தைப்
படித்திருக்கிறோம்…!”
ஆனால், “இறைவன் எழுதிய / நம் வாழ்வின் / கடைசிப் பக்கத்தை மட்டும் / நம்மால் படிக்க முடிவதே இல்லை…!” (ப.85). காரணம் படிப்பதற்கான நேரம் வரவில்லை என்பதா? அல்லது படித்துப் புரிந்து கொள்வதற்கான பக்குவம் இன்னும் வாய்க்கவில்லை என்பதா? உண்மையில், இது ஒரு புரியாத – புரிந்து கொள்ளவும் முடியாத – ஒரு புதிர் தான்!
“உறங்குவது போலும் சாக்காடு; உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு”
என ‘நிலையாமை’ அதிகாரத்தில் இடம்பெறும் ஒன்பதாவது குறட்பாவில், இறப்புக்கும் பிறப்புக்கும் ஏற்ற இரு உவமைகளைக் கையாண்டிருப்பார் வள்ளுவர் பெருமான். அவரது கருத்தியலில், “இறப்பு எனப்படுவது ஒருவனுக்கு உறக்கம் வருதலைப் போன்றது; பிறப்பு எனப்படுவது உறக்கம் நீங்கி விழித்துக் கொள்வதைப் போன்றது”. வள்ளுவத்தின் தாக்கத்தில்,
“இந்த மண்ணுலகில் / பிறக்கும் போதே
மரணத்தோடு ஒப்பந்தம் / செய்து கொண்டு தான்
எல்லா உயிர்களும் ஜனிக்கின்றன…!”
என மொழிந்திடும் கவிஞர், இறப்பதற்கும் மீண்டும் பிறப்பதற்கும் கையாண்டிருக்கும் உவமை அருமையானது!
“ஆனாலும் / மீண்டும் மீண்டும்
அலை வந்து அழித்தும் / கடற்கரை மணலில்
மனிதன் விட்டுச் செல்லும் / கால் தடங்களைப் பொல
பிறப்பும்” (ப.54)
நன்னூலார் குறிப்பிடும் ‘விளங்கு உதாரணத்தது ஆகுதல்’ என்னும் நூல் அழகுக்கு நன்கு பொருந்தி வரும் நயத்தகு உவமை இது!
கணந்தோறும் நினைவுகளில் உயிர் வாழும் உண்மைக் காதல்!
மனித வாழ்வில் உண்மையான காதல் பெறும் இடம் உறுதியானது; உயர்வானது. ‘காதல் காதல் காதல் / காதல் போயின் காதல் போயின் / சாதல் சாதல் சாதல்’ என மும்முறை உணர்ச்சிமிகு குரலில் மொழிவார் கவியரசர் பாரதியார். திருமலை சோமுவோ ‘காதல் போயின்…!’ என்னும் தலைப்பில் எழுதிய கவிதையில்,
“உயிர் வாழும் வரைக்கும் / உன் நினைவோடு
கழியும் எந்நாளும்!
போனாலும் வந்தாலும் / காதல் ஒன்றே உயிராகும்!
காதல் போயின் / கவிதையாய் வாழும்
கணந்தோறும் நினைவுகளில் / காதல் ஒன்றே உயிர் வாழும்!” (ப.50)
எனக் கணந்தோறும் நினைவுகளில் கவிதையாய் உயிர் வாழும் உயரிய, உறுதிப்பாடு மிக்க, உயிர்க் காதலைப் போற்றிப் பாடுகின்றார்.
“நீ இல்லாத என் வாழ்வில் / ஒளி என்பது ஏது…?”
எனக் கேட்கும் காதலன்,
“ உன் விழி எனும் தீக்குச்சியில் தான் / ஒளி பெறும்
இருளுக்குள் இருக்கும் / என் இதயம்!” (ப.53)
என வெளிப்படையாக உள்ளது உள்ளபடி உரைக்கிறான்.
காதலனின் உள்மனதில் துணையாய் ‘ஒரு சன்னலுக்குள் எட்டிப் பார்க்கும் நிலவாய் நிற்கிறாளாம் காதலி!’ (ப.47). தன் காதலியை இன்னொரு நிலவெனவே காண்கிறானாம் காதலன்!
“தேயாதே… கரையாதே… மறையாதே…
மனதை விட்டு என்றும் நீ!” (ப.63)
என்பதே காதலன் காதலிக்கு விடுக்கும் அன்பு வேண்டுகோள்!
“உருகும் என் நெஞ்சில் / உறைந்தவள் நீ – உன்
கண்கள் பட்டு / கரைந்தவன் நான்” (ப.68)
என்பது காதல் வயப்பட்ட ஓர் ஆண்மகனின் அனுபவ மொழி!
“கட்டி முடிக்கப்படாத / தாஜ்மஹாலாய் என்றும் / என் காதல்” (ப.68)
எனத் தன் காதலின் தன்மையை எடுத்துரைக்கிறான் காதலன்! இன்னும் ஒரு படி மேலாக,
“ஆண்டவர் எல்லாம் தடம் பதிக்க
என் இதயம் ஒன்றும் ஈரமண் இல்லை
உனக்காக எழுப்பப்பட்ட பொற்கோயில்” (ப.71)
எனக் காதலன் தெள்ளத் தெளிவாக, முடிந்த முடிபாகப் பறைசாற்றுவது குறிப்பிடத்தக்கது. “வீழ்வது நான் ஆனாலும் / வெல்வது காதல் ஆகட்டும்!” (ப.91) என்பதே அவனது தாரக மந்திரம் ஆகும்.
பெண் எனும் பிரபஞ்சம்
“மங்கையராய்ப் பிறப்பதற்கே – நல்ல
மாதவம் செய்திடல் வேண்டும் அம்மா!”
எனப் பெண்ணின் பெருமையைப் பேசினார் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை. “ஆண் எனும் அரக்கனாக வாழ்வதினும் பெண் எனும் தெய்வமாக வாழ்வதில் எனக்கு விருப்புண்டு” (திரு.வி.க. வாழ்க்கைக் குறிப்புக்கள்: பகுதி 2, ப.748) எனப் பெண்ணின் உயர்வினைப் போற்றினார் தமிழ்த் தென்றல் திரு.வி.க. இச் சான்றோர்களின் வரிசையில் இணைந்து திருமலை சோமுவும் ‘பெண் எனும் பிரபஞ்சம்’ என்னும் தலைப்பில் ஒரு கவிதை படைத்துள்ளார்.
“பெண்ணே நீ
பிரபஞ்சத்தின் பேரொளியாய் / பிறந்ததனால்…
நிலமும் நீரும் / நிலவும் கூட / நீயென்று ஆனாய்…!”
எனத் தொடங்கும் அக் கவிதை,
“புவியாளும் மன்னன் / கவியாளும் கம்பன் – போல்
பேரறிஞர் யாராகினும் / நீ தந்த வரமன்றோ…!”
எனத் தொடர்ந்து பெண்ணின் பெருமையைப் பேசி,
“ஒளியாய் மொழிவாய் / நதியாய் கடலாய்
மலராய் மழையாய் – என / இப் பிரபஞ்சத்தில் யாவுமாய்
நிறைந்தவளே பெண்!
பெண்ணே நீயில்லா / பிரபஞ்சம் ஏதுக்கடி…?”
என்னும் வினாவோடு நிறைவு பெறுவது முத்தாய்ப்பு,
படைப்பாளுமையில் பளிச்சிட்டு நிற்கும் பன்முகத் திறன்கள்
“மனித குலத்துக்கான / மேன்மை மிகு நெறிகளை
ஒன்றரை அடி வரிகளுக்குள் / வார்த்துத் தொகுத்த
தெய்வப் புலவரின் / திருக்குறளே தேசிய நூல்” (ப.83)
எனப் பெருமித உணர்வு ததும்பி நிற்கத் திருக்குறளின் மேன்மையைப் பறைசாற்றும் போதும்,
“காற்றோடு உலாவும் / உன் பாடல்கள் – உன்னை
நிலைபெற்றிருக்கச் செய்யும்!” (ப.94)
என முத்தமிழின் மூத்த கவியான வாலியின் பாட்டுத் திறத்திற்குப் புகழாரம் சூட்டும் போதும்,
“தட்டி முட்டிப் பார்த்தும் / திறக்கப்படாத கதவுகளும்
இங்கு உண்டு / அவைகளை
அச்சமின்றி உடைத்தெறியுங்கள்!” (ப.77)
என அறச் சீற்றத்துடன் வெடிப்புறக் கூறும் போதும்,
“விடிகாலை வானில் / புன்னகைக்கும்
புதுச்சூரியனாய்… / மீண்டும் மீண்டும் எழுகின்றன”
எனத் தமது கனவுகளின் எழுச்சியைப் பாடும் போதும்,
“விலைகொடுத்து / வாங்கும் பொருளல்ல
புன்னகை / என்றாலும் …
நீ இல்லாமல் – என் / புன்னகைக்குப்
பொருளில்லை” (ப.84)
எனக் காதல் வாய்பாட்டின் வழி நின்று புன்னகைக்குப் பொருள் உரைத்திடும் போதும்,
“விரல் நுனிக்குள் / உலகை இயக்கும் / நூதனம் அறிந்தவன்
மனிதன் / மனிதனாய் மட்டுமல்ல
இறைவனாகவும் / அவதரிப்பவன்” (ப.65)
என ‘மனிதன் எனும் விருட்ச’த்தின் மாண்பினை விதந்து பேசும் போதும்,
“தேடல் தேடல் தேடல் / என்ற அந்த ஒற்றைச் சாவிதான் – நம்
எல்லாக் கனவுகளையும் திறந்து வைக்கும்!” (ப.57)
எனக் கனவுச் சாவியின் பண்பினை அடையாளம் காட்டும் போதும் திருமலை சோமுவின் படைப்பாளுமையில் பன்முகத் திறன்களும் பளிச்சிட்டு நிற்கக் காண்கிறோம்.
அன்னைத் தமிழ் கவிஞருக்குத் தந்திருக்கும் வலிமை
“அன்னைத் தமிழ் எனக்கு…
என் சந்தோஷக் கொண்டாட்டங்களையும் / சங்கடத் தருணங்களையும்
கவிதையாக்கும் வலிமை / தந்திருக்கிறது¬!” (ப.45)
என்பது திருமலை சோமு தம் கவிதை ஒன்றில் தந்திருக்கும் ஒப்புதல் வாக்குமூலம். இவ் வலிமை எதிர்காலத்தில் இன்னும் கூடுதலான வண்ணமும் வனப்பும், வடிவும் வளமும் பெறும் என்பதற்கான நல்லதொரு முன்னோட்டமே ‘மனசுக்குள் பெய்யும்’ என்னும் இக் கவிதைத் தொகுப்பு எனலாம்.
'தமிழாகரர்' முனைவர் இரா.மோகன்
முன்னைத் தகைசால் பேராசிரியர்
தமிழியற்புலம்
மதுரை காமராசர் பல்கலைக்கழகம்
மதுரை - 625 021.
0 Comments:
Post a Comment