காகிதங்கள்

உன்னில் எழுதி எழுதி
கிழித்த எழுத்துக்கள்- என்னை 
கேள்விகள் கேட்கின்றன
தப்பு செய்தவன் நீ
தண்டனை காகிதங்களுக்கா

மதிப்பெண்கள் 
அதிகம் பெற்றுத்தந்த
தேர்வுத் தாள்கள் மட்டும்
எனக்குள் என்றென்றும்
மதிப்பு மிக்கதாய்..!

மறந்தும் கூட 
தொலைத்து விடாமல்
சான்றிதழ்களைப் போல் 
சேகரித்து வைத்திருக்கிறேன்
அவள் காதலைச் சுமந்து வந்த 
காகிதக் கடிதங்கள்

உயிர்பெற்று
உறவின் உருவமாய் தெரிவது
அன்பைச் சுமந்துவரும்
கடிதங்கள் மட்டுமல்ல

நிகழ்வுகளைச் சுமந்து
உலகின் வடிவமாய்
வந்து விழும்
செய்தித் தாள்களும்தான்

வடிவங்கள் மாறலாம்
இறைவனின் அவதாரம் போல்
எத்தனை உரு நீ கொண்டாலும்

நரனுக்கு சிம்மாசனம் தரும்
ரூபாய் நோட்டுக்களை 
நரசிம்ம அவதாரமாய் பார்க்கிறேன்

பணம் சேர்த்து பணம் சேர்த்து
மனிதனின் குணம் மாறிப் போகாமல்
இருக்கவே..
அகிம்சையின் முகம் காட்டிச்
சிரிக்கிறாய் போலும்..!

வெற்றுக் காகிதங்கள் என்று
வீணில் தூக்கி எறிய எதுவுமில்லை
சற்று உற்று நோக்கினால்
துண்டுச் சீட்டு துணுக்குகள் கூட
நறுக்கென்று நெஞ்சைத் தைக்கின்றன

0 Comments: