Tweet
 

ContactMe

Wednesday, December 20, 2017

அனிருத் படத்தில் திருமலை சோமு பாடல்!

0 comments
பத்ரகாளி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் பத்ரகாளி பிரசாத், இணை தயாரிப்பாளர்கள் சத்யசீத்தால, வெங்கட்ராவ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘அனிருத்.’
தெலுங்கில் ‘பிரம்மோற்சவம்’ என்ற பெயரில் வெளியாகி வெற்றி பெற்ற படமே தமிழில் ‘அனிருத்’ என்ற பெயரில்  தயாரிக்கப்பட்டுள்ளது.      
இந்த படத்தில் மகேஷ்பாபு நாயகனாக நடித்துள்ளார். நாயகிகளாக காஜல் அகர்வால்,  சமந்தா, பிரனிதா ஆகியோர் நடித்துள்ளனர். மற்றும் சத்யராஜ், நாசர், ரேவதி, ஷாயாஜி ஷிண்டே, ஜெயசுதா, முகேஷ் ரிஷி ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு – ரத்னவேலு, இசை – மிக்கி ஜே.மேயர், பாடல்கள் – டாக்டர்  கர்ணா, பாசிகாபுரம் வெங்கடேசன், அம்பிகா குமரன், திருமலை சோமு, யுவகிருஷ்ணா, மகேந்திர குலராஜா, எழில் வேந்தன், இணை தயாரிப்பு – சத்யசீத்தால, வெங்கட்ராவ், தயாரிப்பு – பத்ரகாளி பிரசாத்,  வசனம் மற்றும் ஒருங்கிணைப்பு – A.R.K.ராஜராஜா, இயக்கம் – ஸ்ரீகாந்த்.
படம் பற்றி  A.R.K.ராஜராஜா பேசும்போது, “தனது உறவுகள் பசித்திருக்க அடுத்தவர்க்கு தானம் செய்வதைவிட மோசமான காரியம் உலகத்தில் வேறேதும் இல்லை..’ என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழிதான்  இந்தப் படத்தின் கதை. 
முதன்முறையாக இந்த படத்தில் ஏழு பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்துகிறோம்.
யுவகிருஷ்ணா. இவர் ‘வண்ணத்திரை’ வார இதழின் ஆசிரியர். இந்த படத்தில் இடம் பெரும் ‘உன்னோடு பயணம் ஓஹோ சலிக்காத சந்தோஷம் ஓஹோ’ என்ற பாடலை வெறும் 10 நிமிடங்களில் எழுதிக் கொடுத்தார்.
மகேந்திரன் குலராஜா. இவர் பிரான்ஸில் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமாகிறார். இவர் எழுதிய ‘வதனம் அழகு வார்த்தை இனிதே’ என்ற பாடல் மிகவும் அற்புதமாக இருக்கும்.
டாக்டர் கர்ணா. இவர் சென்னையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.  இவர் எழுதிய  ‘யாரோ  பொண்னொருத்தி சின்ன நெஞ்ச கொத்தி’ என்ற பாடல் மிகவும் சிறப்பாக இருக்கும்.
திருமலை சோமு.  இவர் ‘தினமணி’ பத்திரிகையின் இணையதள ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ‘பிரபாஸ் பாகுபலி’, ‘எவண்டா’ போன்ற படங்களுக்கும் பாடல்கள் எழுதி இருக்கிறார். இந்த படத்தில் ‘ஆடிப் பாடும் நாளும் வருகிறதே’ என்ற பாடலை எழுதி இருக்கிறார்.
எழில் வேந்தன்.  இவர் ‘சூப்பர் போலீஸ்’, ‘விளையாட்டு ஆரம்பம்’ போன்ற படங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். இந்த படத்தில் இடம்பெறும் ‘புட் யுவர் ஹான்ஸ் அப்’ என்ற பப் பாடலை  எழுதி இருக்கிறார்.
அம்பிகா குமரன்.  இவர் ஒரு பட்டிமன்ற பேச்சாளர். இவர் இந்த படத்தில் ‘அந்தமான் கண்ணுக்காரி அரிசி மாவு பேச்சுக்காரி’ என்ற பாடலை எழுதியிருக்கிறார்.
பாசிகாபுரம் வெங்கடேஷ்.  இவர் பட்டிமன்ற பேச்சாளர், தமிழ் கவிஞர். எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பல பரிசுகளை பெற்றவர். படத்தின் முதல் பாடலான ‘வாழ்க்கை ஒரு நீரோட்டம்.. வாழ்ந்திருந்தா கொண்டாட்டம்’  என்ற பாடலை எழுதி இருக்கிறார்.
படத்தில் எல்லா நினைவுகளும் சந்தோஷமான நினைவுகளாக இருக்கும். அதனால்தான் பல துறைகளை சார்ந்த வல்லுனர்களை பாடல் எழுத வைத்தோம். டப்பிங் படம் என்பதையும் மீறி ஒரு நேரடி தமிழ் படமாக,  ஒரு புது கலராக இந்த ‘அனிருத்’ திரைப்படம் இருக்கும்..” என்றார்.
Read more...

Sunday, April 23, 2017

ராஜதந்திரம் இல்லாத ராஜா மகன்: சும்மா அதிருது ஸ்டாலினின் வாக்குமூலம்

0 comments
 அரசியல் என்பது திட்டமிட்டு செயல்பட வேண்டிய ஒரு களம். அந்த திட்டம் என்பது மக்கள் நலன் சார்ந்தும் நாட்டின் வளம் சார்ந்தும் இருக்க வேண்டும் என்பது பொது விதி. ஆனால் இன்றைய அரசியல் சூழல் அப்படி இருக்கிறதா என்றால் இல்லை என்ற பதில் ஏகோபித்த குரலில் ஒலிப்பதை நாம் கேட்க முடிகிறது. தமிழகத்துக்கு இது போதாத காலாமோ என்னவோ தெரியவில்லை. சமீபகாலமாக நடக்கும் பல்வேறு தொடர் போராட்டங்களும் உண்ணாவிரதங்களுக்கும் இடையில் ஆளும் தரப்பினர் உட்கட்சி பூசலால் பிளவுபட்டிருப்பதோடு, எந்த ஒரு மக்கள் பணியையும் முறையாக செய்யாமல் ஆட்சியையும் பதவியையும் காப்பாற்றிக் கொள்வதிலேயே அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். 

மேலும் படிக்க..
Read more...

Monday, April 17, 2017

சகிகலா புஷ்பாவின் புதிய சடுகுடு: நகைச்சுவையாகும் தமிழக முதல்வர் நாற்காலி

0 comments

சகிகலா புஷ்பாவின் புதிய சடுகுடு: நகைச்சுவையாகும் தமிழக முதல்வர் நாற்காலி


https://goo.gl/YRr6ys
Read more...

Tuesday, February 21, 2017

புலிக்குப் பிறந்தது பூனையாகலாமோ..? மு.க.ஸ்டாலின் இனி என்ன செய்ய வேண்டும்!

0 comments
தமிழக அரசியலின் பரபரப்பான சூழ்நிலையில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் திமுக என்னென்ன செய்ய வேண்டும் என்று அரசியல் நோக்கர்களின் பார்வை குறித்து இங்கே சில விசயங்களை முன்வைக்க விரும்புகிறேன்.
அரசியல் என்றாலே கால சூழலுக்கு ஏற்ப காய்நகர்த்துதல் என்பதுதான். அந்த பணியை மிகவும் நூதனமாகவும் நுணுக்கமாகவும் முன்னாள் தலைவர்கள் செய்து வந்திருக்கிறார்கள் என்றால் அது மிகையாகாது.
அதாவது ராஜதந்திரத்தோடு செயல்பட்டு மக்கள் மத்தியில் நன்மதிப்பு பெறுவதோடு ஆட்சியை, அரசியல் அதிகாரத்தை கைப்பற்றுதல் அல்லது தக்க வைத்துக் கொள்ளுதல். அந்த வகையில் இன்றைய அதிமுக அரசின் ஏகோபித்த தலைவராக இருந்த, மக்களின் முதல்வர் என்று புகழப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்திற்கு பிறகு அந்த கட்சியில் உட்பூசல் ஏற்பட்ட நிலையிலும் சரியான காய்நகர்த்துதல் மூலம் ஆட்சி அதிகாரத்தையும் கட்சிப் பதவியையும் கைப்பற்றுவதில் சசிகலா சரியான ராஜதந்திரியாகவே செயல்பட்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
மக்களின் வரவேற்பு வாக்காளர்களின் விருப்பம் என்பதையெல்லாம் தாண்டி அவர் தனக்கான இடத்தையும் ஆதரவையும் தேடிக் கொண்டிருப்பது அவரின் ராஜதந்திரத்தை எடுத்துக் காட்டுகிறது. அதில் என்ன நீதி இருக்கிறது எங்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது, வென்றிருப்பது பணநாயகமா, ஜனநாயகமா என்றெல்லாம் நாம் இப்போது உள்ளே சென்று ஆராய வேண்டியதில்லை. ஒரு வழக்கில்  நீதி நிலைநாட்டப்பட்டு அவர் பெங்களூர் சிறையில் உள்ளார் என்பது வேறு கதை. ஆனால் ஒரு அரசியல் சூத்திரதாரியாய், மாபெரும் தலைவரின் இடத்தை எப்படி கைப்பற்ற வேண்டும் என்ற தந்திரத்தை தெரிந்து வைத்து அதன் போக்கில் வென்று இருக்கிறார்.  
இந்த வெற்றி நிலையானதா,.. அல்லது தற்காலிகமானதா என்றும் நாம் பார்க்க வேண்டியதில்லை. அவரின் காய்நகர்த்தலின் முதல் வெற்றி இது என்றே பார்க்க வேண்டும். சசிகலா என்பவர் யார்?, குரலை கூட நாம் கேட்டதில்லை அவருக்கு அரசியலில் என்ன தெரியும் என்று கேள்வி கேட்டுக் கொண்டிருப்பவர்களுக்கெல்லாம் இது முதல் சவுக்கடி அல்லவா! சரி இப்போது நான் ஏன் சசிக்கலாவை புகழ்கிறேன் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும்..  
33 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் இருந்த ஒருவரின் அரசியல் காய்நகர்த்துதல் இத்தனை தெளிவாக இருக்கிறது என்றால் அரை நூற்றாண்டுகள் தமிழகத்தில் அரசியலில் இருக்கும் மிகப்பெரிய தலைவரான கருணாநிதியின் அரசியல் வாரிசான மு.க.ஸ்டாலின் எந்த அளவுக்கு ராஜதந்திரியாக இருந்திருக்க வேண்டும்!
தற்போதைய அரசியல் சூழ்நிலையில் திமுகவின் செயல் தலைவராக இருக்கும் அவர் எந்த மாதிரியான காய்நகர்த்துதலை முன்னெடுத்திருக்கலாம். அல்லது குறைந்த பட்சம்  அவரது செயல்பாடுகள் எப்படியெல்லாம் இருந்திருக்க வேண்டும் என்று அரசியல் நோக்கர்களின் பார்வையில் சில கருத்துக்கள் முன்வைக்கப்படுகிறது.
1. தமிழகத்தின் முன்னணி அரசியல் தலைவரான ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சக அரசியல் தலைவராக முதல்வரின் உடல் நலம் குறித்த வெள்ளையறிக்கை வெளியிட வேண்டும் என்று அவர் தமிழக அரசை வலியுறுத்தியிருக்க வேண்டும். 
2 முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக பலதரப்பில் சந்தேகங்கள் எழுப்பப்பட்ட போது ஒரு எதிர்கட்சித் தலைவராக தன் நிலைப்பட்டை அவர் வெளிப்படுத்தி இருக்க வேண்டும். அல்லது ஒரு சக அரசியல் தலைவர் என்ற முறையில், ஜெயலலிதாவின் மரணம் குறித்து, தமிழக அரசு அளித்த விளக்கத்தின் நிறைகுறைகளை மக்களிடம் பேசியிருக்க வேண்டும். 
3. திமுகவின் இளைஞர் அணியும், மாணவர்கள் அணியும் நடத்தாத போராட்டமோ புரட்சியோ இல்லை என்ற வரலாற்று பக்கங்களை மு.க. ஸ்டாலின் நினைவில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மாணவர்களின் தன்னெழுச்சிப் போராட்டமாக பார்க்கப்படும் மெரினா புரட்சி குறித்து ஆளுங்கட்சியின் செயல்பாடுகளில் இருந்த குறைகளை வலுவாக விமர்சித்திருக்க வேண்டும். 
4. தமிழகத்தில் அதிமுக இண்டாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்று 9 மாதங்கள் கடந்து விட்ட சூழலில் இதுவரை அரசின் செயல்பாடுகள் முற்றிலும் கேள்விக்குறியாகவே உள்ளன என்பது தெரிந்தும் நிறைவேற்றப்படாமல் உள்ள மக்கள் பிரச்னைகள் குறித்து ஸ்திரமான எதிர்கட்சியாக திமுக இதுவரை எந்த போராட்டத்தையும் முன்னெடுக்காமல் இருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. 
5. அதிமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. தேர்தலுக்கு முன்பு டாஸ்மாக் ஒழிப்புக்கு குரல் கொடுத்த எதிர்கட்சிகள் இன்று ஊமைகளாகிப் போயிருப்பதும், மக்களின் வாழ்வாதார பிரச்னைக்காக எதிர்கட்சியாக குரல் கொடுக்க வேண்டிய இடத்தில் இருந்தும் அதை முறையாக செய்யாமல் திமுக இருப்பதும் வருத்தத்தை அளிக்கிறது. 
6. ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி பூசலில் தலையிட திமுகவுக்கு உரிமை இல்லை என்றாலும் மக்கள் விரும்பாத ஒருவரை முதல்வராக ஆக விடாமல் தடுக்கும் நடவடிக்கையில் திமுக இறங்கி இருக்குமேயானால் ஸ்டாலினுக்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்திருக்க வாய்ப்பு உண்டு.
7. எதிர்க் கட்சி தலைவரான மு.க.ஸ்டாலினுக்கு சசிகலா மீது தனிப்பட்ட கருத்து எதுவாக இருப்பினும், மனித நேய மக்கள் கட்சியைச் சேர்ந்த தமீம் அன்சாரி மக்கள் கருத்து கேட்க தன் அலுவலகத்தில் வாக்கு சேகரிப்பு பெட்டி வைத்தது போல் திமுக தமிழகம் முழுவதும் ஒரு வாக்குச் சேகரிப்புப் பெட்டி வைத்து மக்களின் கருத்தை ஆளுநரிடம் பதிவு செய்திருக்கலாம். நிச்சயமாக அது  திமுகவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்திருக்கும். 
8. சட்டப் பேரவையில் பெரும்பான்மை நிரூபிக்கும் கூட்டத்தின் போது திமுகவுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்க அமைதியான உள்ளிருப்பு போராட்டம் நடத்தியிருக்கலாம். 
9. ஒவ்வொரு முறை சட்டப்பேரவை கூட்டத்தின் போதும் திமுக ஒன்று வெளிநடப்பு செய்கிறது. அல்லது வெளியேற்றப்படுகிறார்கள் என்ற நிலையை மாற்றி ஒட்டு மொத்த மக்களையும் ஊடகத்தையும் தங்கள் பக்கம் திருப்புகிற வகையில் ஒரு வித்தியாசமான போராட்டத்தை முன்னெடுத்திருக்கலாம். 
10. அனுமதி பெறாமல் உண்ணாவிரதம், போராட்டம், ஊர்வலம், முற்றுகையிடுதல் போன்ற பழைய போராட்ட நடவடிக்கைகள் எல்லாம் ஒரு சம்பிரதாயமாகவே போய்விடும் என்பதை திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அறியாததல்ல. எனவே திமுக ஒரு வலுவான எதிர்க்கட்சியாக இருக்க கூடிய இந்த நிலையில் தமிழகத்தின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு மு.க.ஸ்டாலின் இனி என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 
Read more...

திசை மாறுகிறது "தீபா" புயல்?

0 comments
தமிழக அரசியலில் கடந்த டிசம்பர் மாதம் அடிக்க தொடங்கிய புயல் ஒரு புரட்டு புரட்டி அடித்து இப்போதுதான் சற்று ஓய்ந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணச் செய்தியில் தொடங்கி பல்வேறு காட்சிகள் தினமும் நம்மை விறுவிறுப்பாக கண்காணிக்க செய்தது. அடுத்து என்ன, அடுத்து என்ன என்று நாள்தோறும் நாடே உற்று நோக்கிக் கொண்டிருந்த வேளையில் தான் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, தமிழக அரசியலை புரட்டிப் போடப் போகும் இன்னொரு புயலாக கிளம்புவார் என்று பேசப்பட்டது.
ஜெயலலிதாவின் அபிமானிகள், ஆதரவாளர்கள் எல்லோம் அவரை இன்னொரு ஜெயலலிதாவாகவே பார்க்கத் தொடங்கினர். தினம் தோறும் அவர் வீட்டு முன் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வந்து குவிந்ததோடு அவரை அரசியலுக்கு வருமாறும் அதிமுகவின் தலைமையை ஏற்கவேண்டும் என்றும் ஆரவார குரல் எழுப்பினர். அதுமட்டும் இன்றி மாநிலம் முழவதும் வரவேற்பு பதாகைகளும், தொண்டர்களின் ஆரவாரமும் நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது.
இந்நிலையில்தான் எதிர்பாராமல் வந்த ஜல்லிக்கட்டு தன்னெழுச்சிப் போராட்டம் தீபா புயலை முடக்கிப் போட்டது. என்றாலும் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பின் மீண்டும் மையம் கொள்ளத் தொடங்கிய தீபா புயல் மெல்ல தீவிரம் அடையும் நேரத்தில் அரசியலில் புதிய சூறாவளியாக புறப்பட்டதுதான் பன்னீர் செல்வத்தின் அதிரடி முடிவுகள்.
அதிமுகவில் சசிகலாவின் தலைமையை ஏற்க முடியாமல் திடீர் என ஞானோதயம் தோன்ற ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வந்து தியானம் செய்த அவர் அம்மாவின் ஆன்மா உந்தியதால் வெகுண்டு எழுந்ததாகவும் மனசாட்சியோடு ஒரு யுத்தம் நடத்தியப் பின் இறுதியில் இங்கு வந்து பேசுகிறேன் என்றும் செய்தியாளர்களுக்கு பேட்டிக் கொடுத்து தமிழகத்தின் கடைக்கோடி மனிதனையும் திரும்பிப் பார்க்க வைத்தார்.

இந்த அதிர்வலையில் செய்வது அறியாமல் சசிகலா அணியை விட அதிகம் திணறியது, தீபாவின் அரசியல் கனவுதான் என்று சொல்ல வேண்டும். வெவ்வேறு திசையில் புறப்பட்ட இரண்டு புயல் சின்னங்கள் ஒரே இடத்தில் மையம் கொள்வது போல தீபா, ஓ. பன்னீர் செல்வத்துடன் இணைந்து செயல்படுவது என்று முடிவெடுத்தார்.
இதில் அவரின் ஆதரவாளர்கள் பலருக்கும் அதிருப்திதான் என்றாலும் வேறு வழியிலாமல் அப்போதைய சூழலுக்கு அதை செய்ய வேண்டியதாகியது. அந்த முடிவுக்குப் பின் சசிகலாவின் சிறைவாசம், கூவத்தூரில் எம்.எல்.ஏக்கள் சிறைவைப்பு, போன்ற சம்பவங்கள் எல்லாம் தங்களுக்கு சாதகமாக மாறும் என்றே அவர்கள் எண்ணினர். ஆனால்  சசிகலா அணியை அவர்களால் வீழ்த்தக் கூடிய அளவுக்கு வலிமையையும் ஆதரவும் அவர்கள் தரப்பில் இல்லை என்பதால் சட்டப் பேரவை பெரும்பான்மை நிகழ்வில் சசிகலா அணியே வென்றது.
இதையடுத்து உண்மையான அதிமுக அணி நாங்கள் தான் என்று சொல்லிக் கொண்ட பன்னீர் செல்வம் அணி மீண்டும் தர்மம் வெல்லும் என்றே கூறி அமைதி காக்க தொடங்கினர். எம்எல்ஏக்கள் ஆதரவுடன் சசிகலா அணி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றாலும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சசிகலா ஆதரவு எம்எல்ஏக்கள் தொகுதிக்கே செல்லமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பது வேறுகதை.
இதற்கிடையில் வரும் 24-ம் தேதி ஜெயலலிதாவின் பிறந்த நாள் அன்று தனது அரசியல் பிரவேசம் குறித்த முக்கிய முடிவை அறிவிக்கப் போவதாக ஏற்கனவே கூறியிருந்த தீபா, இபோது என்ன செய்வார், என்ன சொல்வார் என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இருக்கிறது. ஆனாலும் தீபா புயலாய் புறப்பட்டு தமிழக அரசியலை புரட்டி போடுவார் என்று எதிர்பார்த்திருந்த தொண்டர்களுக்கு அந்த புயல் திசை திரும்பி இருக்கிறதோ, அல்லது வேகம் குறைந்து வலுவிழந்து விட்டதோ என்று எண்ணும் அளவுக்கு சூழல் மாறியிருக்கிறது என்பதான் உண்மை.

இதற்கிடையில், திமுக கையில் எடுத்துள்ள போராட்ட அலைகளுக்கு மத்தியில் தீபாவின் முடிவுகள் தமிழக அரசியலில் என்ன மாற்றத்தை கொண்டு வந்துவிட முடியும் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. அதிகபட்சம் ஒரு  புதிய கட்சி ஒன்று உதயமாலாம். இந்த புதிய கட்சியில் தீபாவின் கரங்களுடன் ஓ பன்னீர் செல்வம் கரங்களும் இணைந்து செயல்படுமா அல்லது தீபா தனித்தே இயங்க போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அது வெறும் கேள்விக் குறியோடு நின்று விடாமல் ஓ. பன்னீர் செல்வத்துக்கான கோரிக்கையாகவும் முன் வைக்கப்பட்டுள்ளது. "தமிழக மக்கள் உங்கள் பின்னால் வர வேண்டும் என்றால் தீபாவை கழக பொதுச் செயலாளராக, தமிழக முதல்வாரக நீங்கள் முன்மொழிய வேண்டும்" என்று தீபா அம்மா பேரவை சார்பாக வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. "அப்படி செய்தால் மட்டுமே நாங்கள் உங்கள் பின்னால் வருகிறோம் இல்லை என்றால் நாங்கள் உங்களுக்கு ஆதரவு தர மாட்டோம்" என்று 32 மாவட்ட அம்மா தீபா பேரவை தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். 
எதுவாயினும் ஏற்கனவே 234 தொகுதிகளுக்கு 50க்கும் மேற்பட்ட கட்சிகள் இருக்கின்றன. அத்தோடு இதுவும் ஒன்னா? அல்லது ஒன்றாவது இடத்துக்கானதா..? என்பதை காலம் தான் சொல்ல வேண்டும்.
ஏற்கனவே காலம் கனியும் என்றுதான் திமுகவில். மு.க.ஸ்டாலின், தேமுதிகவில் விஜயகாந்த், பா.ம.கவில் அன்புமணி, நாம் தமிழர் கட்சியில் சீமான், தேசிய கட்சியான பாஜக, காங்கிரஸ் போன்றோரும் காத்திருக்கிறார்கள் எது எப்படி ஆனாலும் மக்கள் தீர்ப்புதானே மகசேன் தீர்ப்பு.
Read more...
Related Posts Plugin for WordPress, Blogger...