தமிழக அரசியல் நிலவரம் இன்று நாடளவில் மட்டும் அல்லாது தமிழர்கள் வாழும் திசையெங்கும் உற்று நோக்கப்பட்டுவருகிறது.
இரு பெரும் ஆளுமை மிக்க தலைவர்களின் மரணத்திற்கு பிறகு தமிழகத்தின் அடுத்த தலைமுறை ஆளுமையாக யார் அரியணை ஏறப் போகிறார்கள் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் எல்லோரிடமும் தொற்றிக் கொண்டிருக்கிறது..
அதிமுகவும் திமுகவும் போட்டிப் போட்டு கனவு கண்டுகொண்டிருந்தாலும், அவர்களின் கனவுக் கோட்டையை தகர்த்து எறிய சாம தான தண்ட யுக்திகளை கையாள பாஜக முனைகிறது.. இரு பெரும் ஆளுமைகள் இல்லாத அந்த வெற்றிடத்தை இரண்டு புகழ் மிக்க திரை நடத்திரங்கள் பெற்றுவிடுமா என்ற கேள்வியை சாமானியன் தனக்குள் எழுப்பும் வகையில் ரஜினியும், கமலும் அரசியல் களத்தில். அவரவர் பாணியில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள்..
உண்மையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை காலம்தான் பதில் சொல்ல வேண்டும் என்றாலும். ஊடகங்களும் தங்கள் பங்கிற்கு மக்களை குழப்பி வைக்க, இது போதாது என்று மக்களை தெளிவடைய விடாமல் ரஜினி தன் பங்கிற்கு அவ்வப்போது ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால் அவருக்கு என்ன லாபமோ,
தள்ளிப் போட்டுக் கொண்டே போவதானால் எந்ந்த ஒருவிசயமும் உரிய பலன் அளிக்காது, ஆறிய கஞ்சி பழங்கஞ்சி என்பது அவருக்கு தெரியாதது அல்ல.. தெரிந்தோ தெரியாமலோ 25 ஆண்டுகளாக மக்களில் ஒரு கூட்டம் அவரை தனது தலைவராக நினைத்து விட்டது. அவர்களுக்காகவது அவர் தெளிவாக பேசலாம். ஆன்மிக அரசியல் என்ற பேச்சில் தொடங்கி இன்று பாஜக ஒரு மோசமான கட்சியாக இருக்கலாம் என்று அவர் சொல்லுவது வரை சித்தன் போல் பேசி சிவன் போக்காக அவர் சென்று கொண்டிருந்தாலும், மக்களை பித்தனாகி விடுகிறார் என்பது மட்டும் உண்மை.
கட்சி ஆரம்பிக்கும் வரை அரசியல் பேச மாட்டேன் என்று சொல்லிய அவர் பல்வேறு செய்தியாளர்கள் சந்திப்பில் புரிந்துகொள்ள முடியாத அரசியல் பதில்களைச் சொல்லி மக்களை குழப்புகிறார்.
அனைத்து எதிர்க்கட்சிகளும் பா.ஜ.க.வை எதிர்த்து குரல் கொடுப்பதாக இருந்தால், அது ஆபத்தான கட்சியாகத்தான் இருக்க வேண்டும் என்று ரஜினி காந்த் கூறி உள்ளார். மேலும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை பிரதமர் அறிவித்த உடன் அதற்கு வரவேற்பு தெரிவித்த ரஜினி இப்போது, அதை அமல்படுத்திய முறை தவறு என்று கூறுகிறார்.. ரஜினி கட்சி ஆரம்பிக்க காலம் கடத்துவதற்கு பாஜகதான் காரணம் அவர் பாஜகவில் இணையப்போகிறார். என்றும், இல்லை அவர் அதிமுகவுக்கு தலைமை பொறுப்பை ஏற்கப்போகிறார் அதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது என்றும் பல்வேறு கருத்துக்கள் கதை கதையாக வந்த வண்ணம் இருக்க, தமிழகத்தின் முக்கிய பிரமுகர்களான, திருமாவளவன், திருநாவுக்கரசர், தினகரன் ஆகிய மூன்று பேரும் தனித்தனியாக ரஜினியை சந்தித்து பேசினர்.
இது மேலும் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியது. இது காணாது என்று, பேரறிவாளன் உள்ளிட்ட யாரையும் தனக்கு தெரியாது என்று சொல்லி மொட்டைத்தலையனையும் பியித்துக்கொள்ள வைக்கிறார்.
இந்நிலையில் 7 பேர் விடுதலை குறித்த கேள்விக்கு ரஜினிகாந்த் அளித்த பதில் நெருஞ்சி முள் போன்றது என்றும், இதை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என்றும் இந்த பதிலை வைத்து அரசியலில் ரஜினி ஹீரோவா, ஜீரோவா என்பதை மக்கள் தீர்மானிப்பார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமர் கூறுகிறார். இவர்களால் அடிக்க முடியாத எல்லா பந்துகளையும் மக்கள் பக்கம் திருப்பிவிடுவது ஒன்றும் புதிது இல்லை என்றாலும் ரஜினி இந்த குழப்பத்துக்கும் பதில் சொல்லாமல் இல்லை.
வழக்கமான அரசியல்வாதி போல் அவர் தன் தரப்பிலான விளக்கம் கூறுவதும், தான் ஒரு முட்டாள் அல்ல என்று பேட்டியின் சூழலை எடுத்துச் சொல்லுவதும். ரஜினி ஒரு சிறந்த நடிகர், அவருடைய பேச்சு திரைப்படத்திற்கு மட்டுமே பொருந்தும். தவறான கருத்துகளை கூறிவிட்டு ஊடகங்கள் மீது பழிபோடுவது வாடிக்கையாகிவிட்டது என முத்தரசன் போன்றோர் சொல்லுதில் இருந்து பார்க்கும் போது ரஜினி இப்போதுதான் முழுமையான அரசியல்வாதியாக மாறிக் கொண்டு வருகிறார் என்பது புரிகிறது. அவருக்குள் ஏற்பட்டு வரும் இந்த ரசாயன மாற்றம் நிச்சயம் அவரை முழு அரசியல்வாதியாக மாற்றிவிடும். ஆனால் நல்ல தலைவனாக அவரால் இருக்கமுடியுமா என்பதை காலம்தான் நமக்குச் சொல்ல வேண்டும்,. காற்றின் திசையை கணித்து விடமுடிந்த அறிவியலுக்கு ரஜினியின் ஆன்மிக அரசியல் கருத்துக்களை கணிக்க முடியாது.
மொத்தத்தில் எல்லோருக்கும் தலை சுற்ற வைத்துவிட்டு கூலாக இருக்கும் ரஜினியின் ஆன்மிக அரசியல் வாழ்க..
0 Comments:
Post a Comment