எழுதி சேகரித்த எனது உணர்வுகள்..

ஒரு மனத்தின் எழுச்சி
ஒரு மனத்தின் மகிழ்ச்சி
ஒரு மனத்தின் துக்கம்
ஒரு மனத்தின் கவலை
ஒரு மனத்தின் அழுத்தம்
ஒரு மனத்தின் காதல்
என எல்லாமும்
விதையாய் விழுந்து
கவிதையாய் எழுகிறது..

இதோ இங்கொரு
மனத்தின் காதல்
கவிதையாய் வாழ்கிறது..!

எழுதி எழுதி சேகரித்த
எனது உணர்வுகள்..
செல்லரித்து கிடக்குதடி...

காகிதத்தில் எழுதிய
என் எழுத்துக்கள் சிதிலமடையலாம்..
எந்த மொழியிலும், வார்த்தைகளுக்குள்
அடங்காமல் தேங்கி கிடக்கும்
என் உணர்வுகள் உருக்குலைந்து
போகலாகுமோ...!

காற்றுக்கு வடிவம் இல்லை
நீருக்கு வடிவம் இல்லை
உனக்காக நானும்
எனக்காக நீயும் சுமந்திருக்கும்
அந்த உயிருக்கும் வடிவம் இல்லை

அத்தனைக்கும் மேலாக
பரந்து விரிந்து கிடக்கும்
ஆகாசத்துக்கும்
அன்பை போதிக்கும்
அனைத்துலக கடவுளுக்கும்
உருவமோ வடிவமோ எவரும்
கண்டதில்லை...

அப்படியாகத்தான் வடிமற்றுக் கிடக்கிறது
எதை எதையோ சுமந்துதவிக்கும்
என் உணர்வுகளும்...!

உருவம் அற்ற ஒன்றை
உருக்குலைத்து போடுவதும்
சிதிலமடையச் செய்வதும்
உன்னால் ஆகுமோ..!

முடிந்தால் உருக்குலைத்துப் பார்
உனக்குள் உயிராக
வாழ்ந்துகொண்டிருக்கும்
என்னை...

0 Comments: