க.நா.சுப்ரமணியம் (ஜனவரி 31,1912 – டிசம்பர் 18,1988)

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிரெஞ்சு
இலக்கிய மேதைகளும், இருபதாம் நூற்றாண்டின் என் தலைமுறைப் புரட்சி
எழுத்தாளர்களான ஜேம்ஸ் ஜாய்ஸும், டி.எஸ். எலியட்டும், எஸ்ரா பவுண்டும்
வகுத்துக் கொடுத்த புரட்சி மரபுக்கு நான் வாரிசு என்கிற எண்ணம்
க.நா.சுவுக்கு இருந்தது. தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தார். உலகத்தின் சிறந்த இலக்கிய ஆக்கங்கள் தமிழில்
மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, கடுமையாக உழைத்தார்.
1930களில் தமிழ் இலக்கியப் பணிக்காகச் சென்னை வந்த அவர் தினமணி
அலுவலகத்தில், தன் எழுத்துகளுடன் கால் பதித்தார்.
அங்கே எழுத்தாளர் வ.ரா. இவருடைய
கையெழுத்துப் பிரதிகளை வாங்கிப் பார்த்தார். கே.என்.சுப்ரமண்யம் என்று
கையெழுத்துப் போட்டிருந்தார். வ.ரா. வெடுக்கென்று கேட்டார், நீர் என்ன
ஆங்கிலேயனுக்குப் பிறந்தவரா, கே.என்.சுப்ரமண்யம் என்று எழுத?
சுப்ரமண்யமோ யோசித்துக் கொண்டிருந்தார். கே.என்.சுப்ரமண்யம் என்றெல்லாம்
எழுதாதீர். கந்தாடை நாராயணசாமி ஐயர் மகன் சுப்ரமண்யம் அல்லவா நீர்;
க.நா.சு. அல்லது க.நா.சுப்ரமண்யம் என்றே எழுதும் என்று கட்டளையிட, இவரும்
அதை ஏற்றுக்கொண்டார். அதுமுதல் க.நா.சு. என்ற மூன்றெழுத்துப் பெயர் தமிழ்
இலக்கிய வானில் சுடர்விடத் தொடங்கியது.
ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி,
முன்றில், Lipi – Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார்.
‘பொய்த்தேவு’ புதினம் இவரது புகழ்பெற்ற படைப்பு. 1946ல் இவர் எழுதிய இந்த
நாவல். சோமு என்ற மேட்டுத் தெரு பையன், சோமு முதலியார் ஆன கதை. வாழ்க்கைத்
தேடல் குறித்த சுவையான படைப்பு. 1986ம் ஆண்டு அவரது ‘இலக்கியத்துக்கு ஒரு
இயக்கம்’ என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்திய அகாதமி விருது
வழங்கப்பட்டது. 2006ம் ஆண்டு அவரது நூல்களை தமிழ்நாடு அரசு
நாட்டுடமையாக்கியது. படிப்பது, எழுதுவது தவிர வேறு எதுவும் செய்யாதவர்.
40 நாவல்கள், 10 சிறுகதைத் தொகுதிகள்,
80க்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள், தத்துவ விசார நூல்கள் 10,
இலக்கிய விசாரம் என்ற கேள்வி பதில் நூல் ஒன்று, உலகத்துச் சிறந்த நாவல்கள்,
உலகத்துச் சிறந்த நாவலாசிரியர்கள், உலகத்துச் சிறந்த சிந்தனையாளர்கள் என
மூன்று தொகுதிகள், இலக்கிய விமர்சன நூல் ஒன்று. இன்னும் பல நூல்களை தம் 86
வயதுக்குள் எழுதிக் குவித்தவர் இவர். அதற்கு மூல காரணமாக அமைந்தது,
சிறுவயதிலேயே இவர் ஊன்றிப் படித்த இலக்கியங்கள் மற்றும் பிற நூல்கள்தான்.
படிக்கும் காலத்திலேயே ஐரோப்பியப்
பத்திரிகைகளுக்கு கதைகள் அனுப்பி வைத்தார் சுப்ரமணியம். வெளிநாட்டு மற்றும்
இந்திய ஆங்கிலப் பத்திரிகைகளில் அவருடைய கதை கட்டுரைகள் வெளிவந்தன.
1935-இல் டி.எஸ்.சொக்கலிங்கம் நடத்திவந்த காந்தி இதழில் வெளிவந்த கதைகள்
அவரது சிந்தனையை தமிழின்பால் திருப்பின. தொடர்ந்து மணிக்கொடி அவரை
ஈர்த்தது. தமிழில் எழுதத் தொடங்கினார் க.நா.சு.
மலையாளக் கவிஞரான குமாரன் ஆசான் நினைவாக
உருவாக்கப்பட்ட ஆசான் கவிதைப் பரிசு 1979ஆம் ஆண்டு க.நா.சுவுக்கு
வழங்கப்பட்டது. அவருக்குக் கிடைத்த முதல் தனிப்பட்ட அங்கீகாரம் அதுதான்.
அதற்கு முன் தமிழக அரசின் பரிசை ’கோதை சிரித்தாள்’ என்ற நூலுக்காகப்
பெற்றிருந்தார்.
க.நா.சுவின் மறைவுக்குப் பின்பு, அவர்
சேகரித்துவைத்திருந்த புத்தகங்களையும் அவரது கையெழுத்துப் படிகளையும் அவரது
மருமகன் பாரதி மணி சுந்தர ராமசாமி நினைவு நூலகத்துக்குக் கொடுத்தார்.
0 Comments:
Post a Comment