உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் இந்தியா

 


இந்தியா வேகமாக வளர்ந்து வருகிறது என்பதை இன்று யாரும் மறுப்பதற்கில்லை. அரசியல்வாதிகள், வாக்கு அரசியலுக்காகவும் தங்கள் சுயலாபத்திற்காகவும் நாட்டின் வளர்ச்சி குறித்த உண்மைகளை மறுக்கவோ, மறைக்கவோ செய்யலாம். ஆனால் ஆயிரம் கைகள் மறைத்தாலும் ஆதவன் மறைவதில்லை என்பது போல் தேசத்தின் வளர்ச்சியை பல புள்ளி விவரங்கள் உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிவிடுகின்றன.

நியூயார்க்கை தலைமையிடமாக் கொண்ட கோல்ட்மேன் சாக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் 2075 ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறும், ஜப்பான் மற்றும் ஜெர்மனியை மட்டுமல்ல, அமெரிக்காவையும் தாண்டி முன்னேறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதற்கிடையில் கடந்த 10 ஆண்டுகளில் 5.5% சராசரி மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை எட்டியுள்ள இந்தியா ஏற்கனவே உலகின் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக உள்ளது. 2027 ஆம் ஆண்டுக்குள் ஜப்பான், ஜெர்மனியை விஞ்சி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக இந்தியா மாறும். மேலும் பிரதமர் மோடியில் 10 ஆண்டுகால ஆட்சி முடிவில் மூன்றாவது பெரிய பங்குச் சந்தையாக இருக்கும், என்று மோர்கன் ஸ்டான்லியின் இந்தியாவின் தலைமை ஈக்விட்டி வியூகவாதி ரிதம் தேசாய் தெரிவித்துள்ளார்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது இன்று $3.5 டிரில்லியனில் இருந்து 2031-ல் $7.5 டிரில்லியன்களைத் தாண்டி இரண்டு மடங்காக உயரும். உலகளாவிய ஏற்றுமதியில் அதன் பங்கு ந்த காலகட்டத்தில் இரட்டிப்பாகும், அதே நேரத்தில் மும்பை பங்குச் சந்தை 11% வருடாந்திர வளர்ச்சியை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

கோவிட்-19 தொற்றுநோயை கட்டுப்படுத்துவதில் திறம்பட செயல்பட்டு உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இருந்த இந்தியா, பிரகாசமான வளர்ச்சிப் பாதையை நோக்கி நாட்டின் பொருளாத்தைக் கொண்டு செல்கிறது. தற்போது பெரிய உலகப் பொருளாதார நாடுகளின் வரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. 2027 ஆம் ஆண்டில் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2022-27 க்கு இடையில் பொருளாதாரத்தின் அளவு மதிப்பிடப்பட்ட 1.8 டிரில்லியன் அமெரிக்க டாலர் அதிகரிப்பு, ஆஸ்திரேலிய பொருளாதாரத்தின் தற்போதைய அளவை விட அதிகமாக இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டு உலகப் பொருளாதார வளர்ச்சியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 15.4% பங்களிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 2014 ஆம் ஆண்டில் உலகளாவிய லீக் ஆஃப் நேஷன்ஸில் 10 வது இடத்தில் இருந்த இந்தியா இன்று பெரிய பொருளாதாரமாக ஐந்தாவது தரவரிசையில் உள்ளது. விரைவில் மக்கள் தொகையில் மட்டுமல்ல பொருளாதாரத்திலும் இந்தியா, சீனாவை மிஞ்சும் என்று தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக இந்தியப் பிரதமராக இருக்கும் போது, உலகின் முதல் மூன்று பொருளாதார நாடுகளில் இந்தியா இணையும் என்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறியுள்ளார்.

உக்ரைன் ரஷ்யா போரால் ஏற்பட்டுள்ள உலகளாவியப் பொருளாதார நெருக்கடிகளுக்கிடையில் இந்த ஆண்டு இந்தியப் பொருளாதாரம் கிட்டத்தட்ட 7% வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நியூயார்க்கை தளமாகக் கொண்ட முதலீட்டு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி மற்றும் எஸ்&பி குளோபல் ஆகியவற்றின் சமீபத்திய முன்னறிவிப்பின்படி, அந்த வேகம் தொடரும், ஜப்பான் மற்றும் ஜெர்மனியை முந்தி உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறுவதற்கு இது உதவும் என்று கூறப்படுகிறது.

பல தசாப்தங்களாக, உலக முதலீட்டாளர்கள் தொழிற்சாலைகளை அமைப்பதற்காக சீனாவிற்கு படையெடுத்தனர், ந்த நேரத்தில் பின்தங்கி இருந்த இந்தியாவின் உற்பத்தித் துறை நாட்டின் பொருளாதாரத்தை பின்னுக்குத் தள்ளியது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு பதவியேற்றதில் இருந்து “மேக் இன் இந்தியா” பிரச்சாரத்தை ஊக்குவிக்க பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட முயற்சிகள் உற்பத்தி துறையின் வளர்ச்சியை ஊக்குவித்தது. இப்போது, சீனாவுக்கு அடுத்தபடியாக, இந்தியா வேகமான வளர்ச்சி அறிகுறிகளை கொண்டுள்ளன என்று பொருளாதார நிபுணர் முகோபாத்யாய் சுட்டிக்காட்டுகிறார்.

அதேபோல நாட்டின் மிகப்பெரிய கடன் வழங்கும் நிறுவனமான எஸ்பிஐயின் பொருளாதார வல்லுநர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையிலும் இந்தியப் பொருளாதாரம் 2027 ஆம் ஆண்டிற்குள் உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்ற மதிப்பீட்டை முன்வைத்துள்ளனர் 2027 ஆம் ஆண்டுக்குள் உலக ஜிடிபியில் இந்தியாவின் பங்கு 4 சதவீதமாக இருக்கும் என்றும், ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் பொருளாதாரம் அதன் ஒட்டுமொத்த அளவில் 0.75 டிரில்லியன் சேர்க்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். ஜிடிபியின் இத்தகைய வேகம், 2047 ஆம் ஆண்டு  இந்தியா சுதந்தரதினத்தின் நூற்றாண்டை கொண்டாடும் போது, 20 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் என்று தெரிவித்துள்ளனர்.

 

0 Comments: