சுற்றுலா போகணும்ன்னு எல்லோருக்குமே ஆசை இருக்கும்.. அதேசமயத்துல எங்கங்க நேர இருக்கு என்று புலம்புவோர்களும், அப்படியே நேரம் இருந்தாலும்,
காசு பணம் செலவாகுமேன்னு நினைச்சு நடுத்தர குடும்பத்தில பிறந்தவங்க யாரும் பெருமாலும் நெடுதூர பயணம் எங்கேயும் போறதில்ல..
அப்படி இருக்க வெளிநாடுகளுக்கெல்லாம் போய் சுத்தி பாக்கனும்ன்னா இன்னொரு ஜென்மந்தான் எடுக்கனும்னு சொல்லக்கூடிய ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்தில பிறந்தவந்தாங்க நானும்.. அப்படி இருக்க.. கனவுல கூட நினைச்சுப் பார்க்காத வெளிநாட்டு பயணம் எனக்கு அமைந்தது. அதுவும் பணி நிமித்தமாக என்று சொல்லும் போது..யாரவது வேணாம்ன்னு சொல்லுவோமா.. அல்வா திங்க கூலின்னு நம்ம ஊர்ல பழமொழி சொன்ன கதையாதான்.
சரிங்க என் கதை ஒருபக்கம் இருக்கட்டும் சீன வானொலியின் பணிக்காக நான் பெய்ஜிங் வந்து இப்போது 4 மாதங்கள் ஆகி விட்டது.. நான் பார்த்து ரசித்த இடங்கள் மற்றும் சில பயண அனுபவங்களையும் இங்கே கட்டுரையாக எழுத விரும்புகிறேன்..
முதலில் பாதாச்சூ பூங்கா பற்றிதான் எழுதப்போகிறேன்.. பூங்கான்னதும் ஏதோ நம்ம ஊரு பார்க் மாதிரி சாதரணமா நினைச்சிடுதீங்க.. இதை கோயில்களின் பூங்கான்னுதான் சொல்லனும். இந்த பாதாச்சூ பூங்காவுக்கு என்னோடு பணியாற்றும் தோழர் மணிகண்டனுடன் சென்றேன்.
முதலில் பாதாச்சூ பூங்கா பற்றிதான் எழுதப்போகிறேன்.. பூங்கான்னதும் ஏதோ நம்ம ஊரு பார்க் மாதிரி சாதரணமா நினைச்சிடுதீங்க.. இதை கோயில்களின் பூங்கான்னுதான் சொல்லனும். இந்த பாதாச்சூ பூங்காவுக்கு என்னோடு பணியாற்றும் தோழர் மணிகண்டனுடன் சென்றேன்.
பெய்ஜிங் வடமேற்கு புறநகர்பகுதியில் அமைந்துள்ள இந்த பாதாச்சூ பூங்கா, ஒரு நீண்ட வரலாற்று பின்னணி கொண்டது. பண்டைய கோயில்கள் மற்றும் மனமகிழ்ச்சி அடையக் கூடிய இயற்கைக்காட்சிகள் அடங்கிய ஒரு புகழ்பெற்ற இடமாக இது உள்ளது. இன்னும் குறிப்பா சொல்லனும்ன்னா..எட்டு புத்த கோயில்களும், பார்வையாளர்கள் ஒரு ஆலயத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் செல்லலாம், அழகான இயற்கைக்காட்சிகள், அரண்மனைகள் மற்றும் அரிய பண்டைய மரங்களைப் இங்கு பார்க்க முடிகிறது.
சாங்கான் கோயில், லிங்குகுங் கோயில், சான்சன் நன்னரி, தபேய் கோயில், லாங்குவன் நன்னரி, ஸியாங்ஜீ கோயில், பாவ்ஷு கோயில் மற்றும் ஜென்போ கோயில் என 8 வழிபாட்டுதளங்கள் இங்கு இருக்கின்றன. பழமையான ஜென்குவோ கோவில் தவிர்த்து, மற்றவை எல்லாம் கூயிவீய் மலை மீது அமைந்துள்ளது.
Chang'an Temple
வாங்க முதலில் நாம சாங்கான் கோயிலுக்குப் போவோம். சாங்கான் அதாவது நித்திய சமாதானத்தின் கோயில் அப்படின்னு இதை சொல்லுவாங்க. பாதாச்சூ பூங்காவுக்குள் நுழையும் போது நாம் நுழைவுச்சீட்டு வாங்கிட்டு உள்ள போகும்போது ஒரு கிலோமீட்டதூரம் தெற்குபக்கத்தில இந்த கோயில இருக்கு.. ஐந்நூறு அராத் சிலைகள் கொண்ட புகழ்பெற்ற கோயிலாக இது இருந்தது, ஆனால் அது 1960 களில் மோசமாக சேதமடைந்தது. எனவே, இது பார்வையாளர்களுக்குத் திறக்கப்படவில்லை.
Lingguang Temple
அடுத்தது லிங்குவாங் கோவில்ங்க.. கிமு 618 - 907ம் ஆண்டுகளில் டங் வம்ச காலத்தில் அமைக்கப்பட்டது இந்த கோவில், மூன்று வாசல்கள் கொண்ட இந்த கோவிலில் 3.3 டன் எடையில் புத்தமதத்தின் நிறுவனர் சக்யமுனி சிலை அமைக்கப்பட்டுள்ளது. லிங்குகாங் கோவிலின் உன்னத கட்டடம் மிகவும் புகழ் பெற்றது, சய்யமுனி நகரின் புல்வெளிகள் கோவிலில் பாதுகாக்கப்படுகின்றன, இதனால் பௌத்தர்களுக்கான புனித கோவிலாக இது விளங்குகிறது.
Sanshan Nunnery
சன்சான் நன்னெறி கோவில் மூன்று மலைகளுக்கு இடையில் அமைந்துள்ளதால் அதற்கு இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இது நாம் காணவேண்டிய ஒரு இடம் ஆகும். இங்கு 38 அடி (11.8 மீ) நீளமும், 10 அடி (3.18 மீ) அகலமும் 45 டன் எடையில் ஐம்பது டிராகன்கள் 9 கடல் ஆமைகள் மற்றும் சீனப் பிராந்தியத்தின் சூழல், சூரியன் மற்றும் சந்திரன் ஆகியவை மிகப்பெரிய அளவில் சிறப்பாக பொறிக்கப்பட்டுள்ளன.
Dabei Temple
டபேய் கோயில், அதாவது பெரிய இரக்கத்தின் கோவில் என்று அழைக்கப்படக் கூடிய இந்த கோயில் யுவன் வம்சத்தில் (1271-1368) புகழ்பெற்ற சிற்பி லியு யுவனால் வடிவமைக்கப்பட்ட புகழ் பெற்ற கோவிலாகும். இங்கு மகாவீர் மண்டபத்தில் பதினெட்டு ஆயுர்வேத அஷ்டகங்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்குள்ள சிலைகள் சந்தன மரத்தின் பொடியில் உருவாக்கப்பட்டுள்ளது. 800 ஆண்டுகள் வரலாறு கொண்ட இந்த கோயிலின்வாயிலில் கிங் வம்சத்து (1644-1911) பேரரசர் காங்க்ஸி எழுதிய கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது.
Longquan Nunnery
டபேய் கோயிலின் மேற்கே அமைந்திருக்கும் லாங்குவன் நன்னரி கோயில் வறண்டுபோகாத தெளிந்த நீரூற்றுக்கு பேர்போன ஒன்றாக சொல்லப்படுகிறது.
Xiangjie
ஜியாங்சி கோவில் பதாச்சூ பூங்காவிலேயே மிகப்பெரியது, இது ஐந்து வாயில்கள் கொண்டதாக அமைந்திருக்கிறது. கிங் வம்சத்து பேரரசர்கள் காங்க்ஸி மற்றும் கியான்லொங் ஆகியவர்களுக்கான தற்காலிக வசிப்பிடங்களில் இதுவும் ஒன்றாக இருந்துள்ளது. ஜியாங்சி கோவில் செல்லும் வழியில், நீங்கள்ஓரிரு மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஒரு பழையப் பனிப்பாறை சிதலமடைந்து இருப்பதை காணலம்.
Baozhu Temple,
பாவ்ஹூ கோவில் 1780 ஆம் ஆண்டில் பேரரசர் கியாங்லாங்கின் காலத்தில் கட்டப்பட்டது. இந்த பேரரசரின் பல கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. பிங்கோ மலை உச்சியில் அமைந்திருக்கும் இங்கோவிலை காணச் செல்ல வேண்டும் என்றால் நாம் லாங்குவன் கோயிலிலிருந்து ஒரு ரோப் கார் மூலம் செல்லலாம்.. இந்த கோயிலில் குன்யான் அறைக்குப் பின்னால் ஒரு குகை உள்ளது, இது முத்து போன்ற கூழாங்கற்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
Zhengguo Temple,
கடைசியாக லூஷி ஹில் என்ற இடத்தில் உள்ள ஜென்குவோ கோவிலுக்கு செல்வோம். 1,200 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்று சிறப்பு கொண்ட இங்கு லுஷி என்ற துறவி வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
8 சிறப்பு வழிபாட்டுதளங்களுடன் அமைந்துள்ள இந்த பாதாச்சூ பூங்காவின் மூன்று மலைகளுக்குமிடையே உள்ள பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. நான்காவது மற்றும் ஏழாவது கோவிலில் சீன சீல் பள்ளத்தாக்கு ஒன்று உள்ளது. இது சீனாவின் முத்திரைப் பண்பாடு கொண்டது. நூற்றுக்கணக்கான முத்திரைகள் எட்டு பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன.
மிங் வம்ச (1368-1644) காலத்தின் கல் புத்தர் சிற்பங்கள் மொயா பள்ளத்தாக்கில் 2000த்தில் கண்டுபிடிக்கப்பட்டன. ஒன்பதாவது பெரிய தளமாக இந்த சிற்பங்கள் கருதப்படுகின்றன. பள்ளத்தாக்கின் நடுப்பகுதி சிவப்பு இலைகள் மண்டலமாகவும் செயல்படுகிறது.
மூன்று மலைகளும் எட்டு பழங்கால கோயில்களும் தவிர பதாச்சூ பூங்காவில் பன்னிரெண்டு இயற்கை காட்சிகள் கொண்ட இடங்களும் நிறைந்துள்ளன. வசந்த காலம், கோடைகாலம், பனிக்காலம், இலையுதிர்காலம் என எந்த காலமானாலும் ஆண்டு முழுவதும் சுற்றுலா பயணிகள் வந்து ரசிப்பதற்கு ஏற்ற இடமாக இது உள்ளது. ஆனால் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இலைகள் சிவப்பு நிறத்தில் இருக்கும்போது இங்கு வந்து ஏராளமான சுற்றுலா விரும்பிகள் புகைப்படம் எடுத்துக் கொள்வது வழக்கம்.
அது அரி இங்கு எப்படிச் செல்ல வேண்டும் என கேட்கிறீர்கள் அப்படித்தானே.. 347, 389, 598, 958, மற்றும் 972 ஆகிய எண் கொண்ட பேருந்ந்தில் சென்று பாதாச்சூ நிலையத்தில் இறங்கலாம். சுரங்கப்பாதை ரயில் பயணம் மூலமும் இந்த இடங்களுக்கு செல்ல முடியும்... சரி நண்பர்களே பெய்ஜிங்கின் மற்றொரு சிறப்பான இடம் குறித்து இன்னொரு சந்தர்ப்பத்தில் பேசலாம். நன்றி வணக்கம்
- திருமலை சோமு
0 Comments:
Post a Comment