இணையத்தின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து வருவதால் எத்தனையோ நன்மைகளும் தீமைகளும் இருக்கிறது. என்றாலும் இன்று ஊடகங்கள் கண்களை மூடிக்கொள்ளும் பல விசயங்ளை இணைய பயன்பாட்டின் மூலம் சமூக ஊடகங்கள் வழியாக வெளிச்சத்திற்கு கொண்டுவந்து விட முடிகிறது. முகநூல் கணக்கு, வாட்ஸ் அப் குழு வைத்திருப்பவர்கள் எல்லோருமே இன்று ஊடகவியலாளராகிவிட்ட நிலையில் எந்த ஒருவிசயத்தையும் இலகுவாக மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்துவிட முடிகிறது.
அந்த வகையில் கடந்த சில நாட்களாக செய்தியாளர்கள், நடிகைகள், விளம்பர மாடல்கள், ஆகியோர்களிடம் இருந்து சமூக ஊடகங்களில் பாலியல் துன்புறுத்தல் பற்றிய குற்றச்சாட்டுகள் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வரும் இந்த குற்றச்சாட்டுகளை ஆமோதிக்கும் இன்னும் சிலரும் அதேபோல் பாதிப்புகளுக்கு உள்ளான சிலரும் ஹஸ்டக் மீடூ என குறிப்பிட்டு பகிர்வதும் அதிகரித்து வருகின்றன.
கடந்த ஆண்டு அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹார்வி வெய்ன்ஸ்டைன் மீது வைக்கப்பட்ட புகாரை தொடர்ந்து 80க்கும் மேற்பட்ட பெண்கள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்தனர். அதில் தொடங்கிய இந்த ஹஸ்டக் மீடூ கலாச்சாரம். இப்போது தமிழகத்திலும் கொடிகட்டிப் பறக்கிறது.. சினிமா பிரபலங்கள் மட்டும் அல்லாமல் அரசியல் தலைவர்ளையும் இந்த ஹஸ்டக் மீடூ குற்றச்சாட்டுக்கள் விட்டுவைப்பதில்லை.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பெரும்பாலும் ஆதாரங்கள் எதுவும் இருப்பதில்ல. என்றாலும் அமைப்பு ரீதியான செயல்பாடாக இருக்கும் போது மட்டுமே இந்த பகிர்வுகள் வெளிவருகின்றன என்பதை கடந்த சில நாட்களில் வெளியான குற்றச்சாட்டுகளிலிருந்து உணரமுடிகிறது. இந்த குற்றச்சாட்டுக்கள் காலம் கடந்து வைக்கப்படுவதற்கு பொதுவாக மூன்று காரணங்கள் உண்டு.
ஒன்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் அந்த பெண்ணால் குறிப்பிட்ட நேரத்தில் எதிர்ப்பு தெரிவிக்க முடியாமல் போய் இருக்கலாம். இரண்டாவதாக, நிர்வாகம் சார்ந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க விரும்பினாலும் நிறுவன கட்டமைப்பு மற்றும் ஆதரவு இல்லாத காரணத்தால் அவர்களால் எதிர்த்து குரல் கொடுக்க முடியாமல் போயிருக்க கூடும். மூன்றாவது பாதிக்கப்பட்ட பெண்ணின் எதிர்ப்பு குரல் நிராகரிக்கப்பட்டதனால் அப்போதைக்கு அவர் மெளனமாக இருந்திருக்கலாம்.
பணி இடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும் பெண்களை பாதுகாக்க 1997 இல் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட விஷாகா வழிகாட்டுதல்களின் பேரில் கொண்டுவரப்பட்ட 2013 (தடுப்பு, தடுப்பு மற்றும் நீக்கம்) சட்டத்தின் கீழ் பெண்களின் பாலியல் துன்புறுத்தல் பிரச்னையை, சரிசெய்ய நோக்கமாக இருந்தது. ஆனால் இன்னும் இந்த பிரச்னை ஓய்ந்த பாடில்லை.. பல நிறுவனங்களில் பெண்கள் வெளியில் சொல்ல முடியாத வேதனைகளை அனுபவித்து வருவது நிதர்சனம்.
அரசு மற்றும் சில தனியார் நிறுவனங்களில் பெண்கள் சந்திக்கும் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க தனி அமைப்பு இருந்தாலும் கூட ஒரு சில துணிச்சல் மிகுந்த பெண்கள் மட்டுமே இத்தகைய பிரச்னையில் இருந்து தப்பிக்கின்றனர். அச்சத்தினால் அமைதியாக இருக்கும் சிலரிடம் அதை சந்தர்ப்பமாக பயன்படுத்துவோரும் உண்டு.. சந்தர்ப்பவாதத்திற்காக அமைதியாக இருந்துவிடும் பெண்களும் உண்டு.. இந்த இரண்டுக்கும் இடையில் சட்டம் என்ன செய்துவிட முடியும் என்பதுதான் பிரச்னையே.. !
பணிபுரியும் இடம் என்று மட்டும் அல்லாமல் கல்வி பயிலும் நிறுவனம் தொடங்கி ஊடகம், சினிமா, விளம்பரத்துறை என அனைத்திலும் இந்த பிரச்னைகளை கடந்துதான் பெண்கள் சாதிக்க வேண்டியிருக்கிறது… வளர்வதற்கு வாய்ப்புகளை தேடினால்.. வாய்ப்புகளுக்கே.. இங்கே வழுக்கி விழவேண்டும் என்றால் எப்போதுதான் எழுந்து நடப்பது.. என்ற கேள்வி ஒருபக்கம் இருந்தாலும்.. வாய்ப்புக்காக வழுக்கி விழுந்து விட்டு, பின்னர்.. வசதி வாய்ப்பு வந்ததும்.. ஹஸ்டக் போடுவது.. என்பது புகழ் தேடலின் இன்னொரு யுக்தியாகவும் இருக்கிறது. எது எப்படியோ.. காலத்துக்கே வெளிச்சம்.. என்றாலும் இந்த ஹஸ்டக் புயலில் இருந்து தப்பிக்க பிரபலங்கள் வருமுன் காப்போம் என்ற கொள்கையோடு கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லதுதானே..!
0 Comments:
Post a Comment