எளிதாக வெற்றி பெறுவோம்..!

நாம் எந்த துறையை சார்ந்தவராக இருந்தாலும் நம் எல்லோருக்குள்ளும் வெற்றி பெற வேண்டும் சாதனையாளராக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி நிற்கும் அதற்காக நாம் நமது நேரத்தை முழுமையாக செலவிடுவதோடு வெற்றியை நோக்கிய தொடர் ஓட்டத்திற்கிடையில் நமது உடல் நலம், குடும்ப உறவுகள், நட்புகள் என எல்லாவற்றுக்கும் நேரம் ஒதுக்கமுடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்க கூடும்.  நீங்கள் அப்படியான ஒரு சிக்கலில் இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்குத்தான் இந்த ஆலோசனை: - 

1. எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள்

நான் இதைச் செய்ய வேண்டும் அதைச் செய்ய வேண்டும் என எண்ணுவது தவறு இல்லை. ஆனால் இதற்கு முன் உங்களைத் தவிர வேறு யாரும் இதைச் செய்திருக்கமாட்டார்கள் என்று நீங்கள் நினைக்காதீர்கள்.  எதைச் செய்வதானாலும் மன அழுத்தம் இல்லாமல் இலகுவாகச் செய்யப் பழகுங்கள் பொறுப்பாக இருங்கள் ஆனால் எதுவும் உங்கள் தலைமேல் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். 

2. பிறரை நம்புங்கள்

நீங்கள் எவ்வளவு பெரிய திறமைசாலியாக இருந்தாலும் மற்றவர்களையும் கொஞ்சம் நம்புங்கள். பிறரை நம்பும் போதுதான் அவர்களுடன் இணைந்து பணியாற்றவும் உங்கள் பணிச்சுமையை குறைத்துக் கொள்ளவும் முடியும். எந்த நேரமும் நீங்கள் புத்திசாலி என்பதை வெளிக்காட்டிக் கொள்ள முனைப்பு காட்டுவீர்களானால் யராரும் உங்களை பின் தொடர மாட்டார்கள். உங்கள் பணியாளர்கள் மீது நீங்கள் உண்மையான நம்பிக்கை கொள்ளவில்லை என்றால் நீங்கள் நல்ல தலைவராக இருக்க முடியாது. நாம் மற்றவர்களை நம்பும் போது மற்றவர்கள் நம்மை நம்புவார்கள் இந்த பரஸ்பர நம்பிக்கை இருந்தால் எந்த வேலையும் எளிதில் வெற்றிகரமாக முடியும். 

3. நோக்கத்தை புரிந்து கொள்ளுங்கள்

தனிமனிதனோ, தொழில் நிறுவனமோ, விளையாட்டு அணியோ அல்லது குடும்பம் என எதுவானாலும், வெறிகரமான செயல்பாட்டுக்கு, நோக்கம் தெளிவாக இருக்க வேண்டும். நாம் என்ன செய்ய முயற்சிக்கிறோம்? நாம் எங்கே செல்கிறோம்? என்ற தெளிந்த சிந்தனை தேவை. நாம் நமது நோக்கத்தை தெளிவபடுத்தாவிட்டால் மற்றவர்கள் அதை புரிந்து செயல்படுவது என்பது கடினமாகும். அவ்வாறு நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் செய்யும் எந்த வேலையானாலும் அது நேரத்தை மட்டுமல்லாமல் திறமையையும் வீணடிக்கும் செயலாகும். நோக்கம் அறிந்து சரியான வேலைகளை சரியான நேரத்தில் செய்யப் பழகிவிட்டால் வெற்றி இலகுவாகும் என்பதோடு,  நாம் நினைத்ததைவிட வாழ்க்கை மிகவும் எளிதானது என்பதையும் புரிந்து கொள்ள முடியும். - திருமலை சோமு

0 Comments: