வேலையை விடும் முன் யோசியுங்கள்!

வாழ்வில் எப்போதும் நாம் ஏதோ ஒன்றை தேடிக் கொண்டேதான் இருக்கிறோம். அவ்வாறு ஒன்றை தேடி நாம் அடைவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். சில நேரங்களில் அந்த காரணங்கள் நியானமானதாகவும், சில நேரங்களில் பொருத்தமற்றவையாகவும் கூட இருக்கலாம்.

நாம் எதை வேண்டுமானாலும் தேடிப் பெறலாம். ஆனால் அதற்கு முன்பாக சுயப் பரிசோதனை என்பது மிகவும் அவசியமாகும்.  உதாரணமாக தற்போது நீங்கள் செய்து கொண்டிருக்கும் வேலையை விட்டு விட்டு புதிய தொழிலோ அல்லதோ புதிய வேலையோ தேடி கொள்வீர்களானால். அதற்கான 8 மிக முக்கிய காரணங்களை சுயப் பரிசோதனை மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். 

1. முடிவெடுக்கும் முன் யோசியுங்கள்

எல்லோருக்கும் மோசமான நாட்கள் என சில நாட்கள் இருக்க கூடும். குறிப்பாக உணர்ச்சிவசப்பட்டு சில முடிவுகளை அவசரத்தில் எடுத்து விடும்போது நமக்கு அது விரும்பத்தகாத பின்விளைவுகளை தரக்கூடும். எனவே எந்த ஒரு முடிவையும் எடுக்கும் முன் 2 முறை யோசிப்பது நல்லது. வேலையை விடுவதாக முடிவெடுத்து வீட்டீர்களானால் அதற்கு முன் உங்கள் தற்போதைய மற்றும் புதிய வேலையில் உள்ள சில சாதக, பாதகங்களை பட்டியலிட்டு எழுதிப் பாருங்கள்.

2.  உங்கள் வேலையை நேசியுங்கள்

நாம் நமது பணியின் மீது மிகுந்த பற்று கொண்டவராய் இருப்பதில் தவறில்லை. அதேசமயத்தில் உடன் பணிபுரிபவர்கள் மற்றும் மேலாளர் மீது பற்று வைக்க வேண்டிய தேவை இல்லை. மேலாளர் மற்றும் உடன் பணிபுரிபவர் மீது உங்களுக்கு சிறு வெறுப்பு இருந்தால் அதை பூதாகரமாக்கி அதன் மூலம் பலன் அடைய சிலர் நினைக்க கூடும். எது எப்படி இருந்தாலும் அவர்களுக்கு பயந்து உங்கள் வேலையை விட வேண்டிய அவசியம் இல்லை.

3. வேலைப்பளு மற்றும் மன அழுத்தத்திற்கான காரணத்தை கண்டுபிடியுங்கள்

இடைவிடாது வேறு எந்த பொழுதுபோக்கும் இல்லாமல் வெறும் வேலையை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தால் நாளடைவில் அது உங்களுக்கு வெறுப்பை ஏற்படுத்திவிடும். அதனாலேயே வேலையை விட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு தோன்றக் கூடும். எனவே உங்கள் வேலைப்பளு மற்றும் மன அழுத்ததிற்கான காரணத்தை கண்டுபிடியுங்கள். அதிலிருந்து விடுபட்டு வேலையை மகிழ்ச்சியோடு செய்யப் பழகிக் கொள்ளுங்கள்.

4. கூடுதல் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள்

உங்கள் வேலை போரடிக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக மட்டும் வேலை விட வேண்டிய அவசியம் இல்லை. பெரும்பாலான நிறுவனங்களில் வேலைகளுக்கு இடையே சில பயிற்சி அளிக்கப்படுகிறது. அதில் கலந்து கொண்டு வேலையில் கூடுதல் திறமையை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் பணி தொடர்பான திறமைகளில் நீங்கள் குறைவாக உணர்ந்திருந்தால் உரிய பயிற்சி எடுத்து கொள்ளும் போது வேலையின் மீது தானாகவே ஆர்வம் ஏற்படும். 

5. தூரத்தை காரணம் காட்டி வேலையை மாற்ற வேண்டாம்

இந்த உலகில் யாரும் கூட்ட நெரிசல்களிலேயே நீண்ட தூரம் பயணிப்பதில்லை. உங்கள் அலுவலகம் செல்லும் பயண நேரம் மற்றும் தூரத்தை காரணம் காட்டி வேலையை மாற்ற வேண்டும் என்றும் நினைக்காதீர்கள். அலுவலகத்திற்கு அருகே உங்கள் குடியிருப்பை மாற்றுங்கள். அதுவும் முடியாது என்றால் பயண நேரத்தை குறைப்பதற்கான மாற்றுவழிகளை கையாளுங்கள். வாரத்தின் சில நாட்களுக்கு உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறான வேலைநேரத்தை உருவாக்கி கொள்ள மேலாளரிடம் பேசுங்கள். அல்லது வீட்டில் இருந்து வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்தால் அதையும் பயன்படுத்தலாம். 

6. வேலை வாய்ப்பு விளம்பரத்தை பார்த்து ஏமாற வேண்டாம்

தற்போது உள்ள உங்கள் வேலை போராட்டமாக இருப்பதாக நீங்கள் நினைத்தால் பிற எந்த வாய்ப்பும் மிகப்பெரிய வாய்ப்பாகவே தெரியும். எனவே எந்த ஒரு வேலை வாய்ப்பு விளம்பரத்தை பார்த்தும் ஏமாந்து விடாதீர்கள். இப்போது நீங்கள் பார்க்கும் வேலையை விட புதிய வேலை எந்த வகையில் எல்லாம் சிறந்தது என தீர யோசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள். 

7.  அதிகமாக சம்பாதிக்க வேண்டுமா..?

ஒரே நாள் இரவில் யாரும் பணக்காரனாக ஆகி விட முடியாது. அது உங்கள் பணித்திறமையில் நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. எனவே பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு வேலையை மாற்றாதீர்கள். உங்கள் நிறுவனத்திலேயே ஊதிய உயர்வு, பதவி உயர்வு பெற முயற்சியுங்கள். புதிய இடத்தில் சென்று உங்கள் திறமையை நிரூபிப்பதற்கு பதில் இங்கேயே உங்கள் திறனைக் கொண்டு அடுத்த கட்ட வளர்ச்சியை அடையுங்கள். 

8.  நல்லதை கருத்தில் கொள்வோம்.

உங்கள் வேலைத் திறமை மற்றும் அதனால் கிடைக்கும் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கண்டு மற்றவர்கள் பொறாமைப்படக்கூடும். அதைப் பற்றி கவலை கொள்ள தேவை இல்லை. எந்த நிலையிலும் சுயபட்சாதாபம் கொள்ளாதீர்கள். வேலைப்பளு, மனஅழுத்தம் உங்கள் திறமையை குறைக்கக் கூடும். அதனால் உங்கள் வேலையை நீங்கள் வெறுக்கும்படி செய்யலாம். எனவே நல்லதை மட்டும் எண்ணத்தில் கொண்டு வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். 

- திருமலை சோமு

0 Comments: