கண்ணே என் நவமணியே..! குழந்தைகள் இறப்பு விகிதித்தை இல்லாமல் செய்வோம்

குழந்தைகள் என்பது ஒரு வீட்டின் செல்வம் எத்தனையோ தம்பதியினர் இன்று குழந்தை பேறுக்காக தவம் இருப்பதோடு.. ஏராளமான மருத்துவ சிகிச்சைகளையும் எடுத்து வருகின்றனர். யாழ் இனிது குழல் இனிது என்பர் தம் மக்கள் மழலைச் சொல் கேளாதோர் என்றார் வள்ளுவர் பெருந்தகை. குழந்தை பாக்கியம் இல்லாதவர்களை கேட்டால் தெரியும் அது வாழ்வின் எத்தனை பெரிய வரம் என்று..


அப்படிப்பட்ட வரமாக அமையும் குழந்தைச் செல்வங்களை பேணிக் காக்க வேண்டிய அவசியம் பெற்றோர்களுக்கு மட்டும் தான் என்று சொல்லி விட முடியாது. வீட்டுக்கும் நாட்டுக்கும் பெரும் பேறாக இருப்பதுதான் குழந்தைச் செல்வம் எனவே குழந்தைகளி காக்க வேண்டிய மிகப்பெரிய பொறுப்பு நாட்டிற்கும்  உண்டு என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. அந்த பெரும் பொறுப்பில் இருந்து நமது நாடு தவறி இருக்கிறது என்பதைதான் ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை பிரிவு மற்றும் உலக வங்கி குழு வெளியிட்டுள்ள அறிக்கை நமக்கு காட்டுகிறது. 

கடந்த 2017 ஆம் ஆண்டில் இந்தியாவில் 802,000 குழந்தைகள் தண்ணீர், சுகாதாரம், சரியான ஊட்டச்சத்து மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாதா காரணத்தால் உயிரிழந்துள்ளதாக யுனிசெஃப், ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது. மேலும் யூனிசெஃப், உலக சுகாதார அமைப்பு (WHO), ஐக்கிய நாடுகள் மக்கள்தொகை பிரிவு மற்றும் உலக வங்கி குழு வெளியிட்டுள்ள அறிக்கையின் படி உலக அளவில் இந்தியாவில் குழந்தை இறப்பு விகிதம் மிக உயர்ந்ததாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும், சர்வதேச அளவில், பச்சிளம் குழந்தைகள் மற்றும் 5 - 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு மற்றும் அதற்கான காரணம் குறித்த ஆய்வறிக்கையை, இந்த ஒருங்கிணைப்பு குழு வெளியிடும். இந்த ஒருங்கிணைப்பு குழு வெளியிட்ட, 2017- ம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையின்படி சர்வதேச அளவில், பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பில், சீனா, முதலிடத்தில் உள்ளது. இரண்டாமிடத்தில் இந்தியா உள்ளது. அதற்கு அடுத்தடுத்த இடங்களில், ஆப்ரிக்க நாடான நைஜீரியா மற்றும் பாகிஸ்தான், மத்திய ஆப்ரிக்க நாடான காங்கோ ஆகியவை உள்ளன. 

இந்தியாவில், 2016ம் ஆண்டில், 8.67 லட்சம் பச்சிளம் குழந்தைகளும், 2017ம் ஆண்டில் 8.02 லட்சம் பச்சிளம் குழந்தைகளும் உயிரிழந்துள்ளன.சுத்தமான குடிநீர், சுகாதாரம், முறையான ஊட்டச்சத்து மற்றும் அடிப்படை சுகாதார சேவைகள் இல்லாததால், பச்சிளம் மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பது தொடர்கிறது என்று உலக சுகாதார அமைப்பின் சுகாதார தலைவர், ககன் குப்தா தெரிவித்துள்ளார். குழந்தைகள் பராமரிப்புக்கென்று எந்தனையோ விழிப்புணர்வு பிரச்சாரங்களும் சிறப்பு வகுப்புகளும் நடத்தப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் பெற்றோர்களின் அஜாக்கரதை மற்றும் சில சுற்றுச்சூழல் பிரச்னைகாரணமாக இவ்வாறான அசம்பாவிதங்கள் நடந்து விடுகிறது. 

இன்றைய அதிவேக சூழலில் பொருளாதார தேடலுக்கு முக்கியத்தும் தரும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கான நலன் குறித்த விசயங்களில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. கேட்டால் அவர்களுக்காகத்தான் நாங்கள் ஓய்வின்றி ஓடி ஓடி சம்பாதித்துக் கொண்டிருக்கிறோம் என்கின்றனர். ஆனால் அவர்களின் உடல் நலம் மற்றும் மனநலம் குறித்து அவர்களுக்கு எதுவும் தெரிவதில்லை. எது வந்தாலும் பணம் இருந்தால் போது சரி  செய்துவிடலாம் என கருதுகின்றனர்.  இந்த நிலையில் அரசு தரப்பில்  கொடுக்கப்பட வேண்டிய அடிப்படை சுகாதார வசதிகளிலும் குறைப்பாடு இதனால் குழந்தைகள் பல தொற்றுநோய்களுக்கு ஆளாக நேரிடுவதோடு உயிரிழக்கும் துர்பாக்கியமும் ஏற்பட்டு விடுகிறது. 

இதற்கிடையில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் வேறு நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது.  எனவே நாட்டில் தற்போதைய சூழலில் தூய்மை இந்தியா திட்டம் ஒருபக்கம் தீவிரப் பிரச்சாரத்தில் இருந்தாலும், நாட்டின் தூய்மை இன்னும் பல இடங்களில் கேள்விக்குறியாகவே இருப்பதால் சுகாதார கேடு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வீட்டுக்கு வீடு சுத்தம் வீதிக்கு வீதி தூய்மை என்ற ஒழுக்க நெறியை  குழந்தை பருவத்தில் இருந்தே கட்டாயப்படுத்தி வந்தால் ஒரு வேளை நாளைய தலைமுறைக்கான இந்தியா தூய்மையான இந்தியாவாக மாறுவதற்கான வாய்ப்பு இருகிறது. இன்று அரசு தூவி இருப்பது தூய்மை இந்தியாவுக்கான விதை மட்டுமே.. இதை மரமாக்க வேண்டிய பொறுப்பு மக்களிடமே. 

சுற்றுப் புறத்தை நாம் பேணுவோம்.. சுகாதாரத்தை அரசு காக்கட்டும். நல்ல குடிநீர், ஊட்டச் சத்து மிக்க உணவு போன்ற விசயங்களில் மக்களுக்கு அரசு உறுதி அளித்து எதிர்காலத்தில் குழந்தைகள் இறப்பு விகிதித்தை இல்லாமல் செய்ய வேண்டும் என்பதே எல்லோருடைய வேண்டுகோள் ஆகும். 

கட்டுரையாளர் : டி.எஸ்.எஸ்

0 Comments: