மாற்றி யோசிப்போம்..! வேலையை மீட்டெடுப்போம்

இயற்கை சார்ந்த வாழ்வை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளிய வரத் தொடங்கிய மனிதன் தற்போது தொழில்நுட்பங்களின் வளர்ச்சியால் இயந்திரங்களின் கைகளுக்குள் அகப்பட தொடங்கி விட்டான். காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்லும் வரை
கணிப்பொறி, செல்போன் என தவிரக்க முடியாத தொழில்நுட்பங்களுடனும், ஏதோ ஒரு இயந்திரங்களுடனும் தான் நாம் நமது அன்றாட வாழ்வை நடத்தியாக வேண்டியுள்ளது.
இயந்திரமயமான இந்த உலகில் ஆடம்பரமாக கருதப்பட்ட பொருட்கள் எல்லாம் தற்போது அத்தியாவசியமானதாகிவிட்டதால், நாம் நமது தேவைகளை சுருக்கிக் கொள்ள தெரியாமல் இயந்திரம் போல் ஓடத் தொடங்கி இருக்கிறோம். இந்நிலையில் தான் உலக பொருளாதார அமைப்பு நமக்கு ஒரு அதிர்ச்சியான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
வரும் 2030-ம் ஆண்டில் உலக அளவில் 210 மில்லியன் அதாவது, 2 கோடியே 10 லட்சம் பேர் தங்கள் வேலையை, தொழிலை மாற்றிக் கொள்ள நேரிடும் என தெரிவித்துள்ளது. இது ஒரு புரட்சிகரமான மாற்றமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. நமது உலகம் தற்போது மனித உழைப்பிற்கு இடையூறு விளைவிப்பதன் உச்சக்கட்டத்தில் இருப்பதாகவும் இதன் மூலம் 4- வது தொழிற் புரட்சி உருவாகும் என்றும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
தொழில்நுட்ப வளர்ச்சிதான் எதிர்காலம் என கருதப்பட்டதால் நாம் புதிய வளர்ச்சிப் பாதையை எட்டினோம். இதன் காரணமாக தானியங்கி கார்கள், ரோபோக்கள் என  மனிதர்கள் செய்த பல பணி இடங்களில் இயந்திரங்கள் நுழைந்தது. ஒரு மனிதன் செய்த பணிகளை விட பலமடங்கு வேகமாகவும், துள்ளியமாகவும், தளர்வின்றி இயந்திரம் அந்த பணியை செய்வதால் அலுவலக வருகைப்பதிவேட்டில் தொடங்கி மனிதர்கள் செய்து வந்த பல்வேறு பணிகளை இயந்திரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தட்டிப் பறித்தன.
இதனால் வரும் 2030-ம் ஆண்டில் உலக அளவில் 8 கோடி பேர் தங்கள் வேலையை இழக்க நேரிடும் என பிபிசி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு தொடக்கத்தில் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார அமைப்பின் சார்பில் ஐ.டி தொழிற்துறையின் திறன்கள் பற்றி ஒரு மாநாடு நடத்தப்பட்டது. இம்மாநாட்டில் உலகளாவிய திறன் இடைவெளிகளை எதிர்கொள்ளுதல்  மற்றும் டிஜிட்டல் முன்னேற்றங்கள் காரணமாக ஏற்படும் வேலை சிக்கல்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.  இதில் IT பிரிவில் 10 லட்சம் ஊழியர்களின் பணி பற்றி மறுபரிசீலனை செய்யும் முன்முயற்சியில் ஈடுபட்ட  டி.சி.எஸ் மற்றும் இன்ஃபோசிஸ் ஆகிய நிறுவனங்கள் முன்னணி வகித்தன.
இதுபோல் பெருமாலான நிறுவனங்களில் மனிதர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்பதில் சந்தேம் இல்லை. எனினும் நாம் இதை கொஞ்சம் மாற்றி யோசித்தால் தனிமனிதனுக்கு பாதிப்பில்லாமல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தமுடியும்.
இந்தியாவின் மக்கள்தொகையில் 50 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் 25 வயதிற்குக் குறைவாக உள்ளனர்.  65 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் 35 க்குக் குறைவாக உள்ளனர்.   2020 ஆம் ஆண்டில், ஒரு இந்தியரின் சராசரி வயது 29 ஆண்டுகள் எனவும், சீனாவுக்கு 37 ஆகவும், ஜப்பானில் 48 ஆகவும் இருக்கும். இந்நிலையில் இன்றைய பாடத்திட்டமானது மாணவர்களுக்கு அறிவுத் திறனை மேம்படுத்துவதாகவும், தொழில் சார்ந்த கல்வியை அளிப்பதாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் வருங்கால சந்ததிகளுக்கு ஒரு நம்பிக்கை அளிக்கக் கூடிய எதிர்காலத்தை நாம் உருவாக்க முடியும்.
இயந்திரமயாக்கல் வேகமாக நடைமுறைப் படுத்தப்பட்டு வரும் சூழலில் மாணவர்களுக்கு படைப்பாற்றல் திறன் மட்டும் எதிர்காலத்தை அளிப்பதாக இருக்கும். முன்னோக்கி யோசிக்கக்கூடிய திறன், புதுமையான அணுகுமுறைகளை காட்சிப்படுத்துதல், மாற்றங்களை முன்னெடுத்தல், தடைகளை வழிகாட்டுதல், சக ஊழியர்களுக்கு தார்மீக ஆதரவை வழங்குதல் போன்றவை இயந்திரங்களால் ஈடு செய்ய முடியாதவை. இதை மனதில் கொண்டு வருங்கால தலைமுறையினர் தங்கள் திறனை வளர்த்துக் கொள்ள வேண்டும். சக மனிதர்களோடு போட்டிப் போட்டுக் கொண்டு தன்னை நிலை நிறுத்திய காலம் போய் இனி மனிதன் இயந்திரங்களுடன் போட்டி போட்டு தன்னை, தன் திறனை நிரூபிக்க வேண்டிய பரிதாபத்தில் இருப்பதை என்னவென்று சொல்வது.

0 Comments: