காலத்தை வென்று மக்கள் மனதில் நிற்கும் மூன்றெழுத்து நாயகன் எம்.ஜி.ஆர்

மக்கள் திலகம், புரட்சித்தலைவர் என்றெல்லாம் புகழப்படும் மூன்றெழுத்து நாயகனான எம்.ஜி.ஆர்
நூறாண்டுகள் கடந்தும் மக்கள் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.  அதற்கு அவரின் திரை உலக சாதனைகள் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியாது. இவர்  தலைச்சிறந்த நடிகராகவும், தயாரிப்பாளராகவும், அரசியல்வாதியாகவும் இருந்தார். அவருடைய வாழ்க்கையில், நடிப்பும், அரசியலும் ஒரு முக்கிய பகுதியாக இருந்தது. 

தமிழ் திரையுலகை முப்பது ஆண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செய்தார். பின்னர், திமுக அரசியல் கட்சியுடன் கைகோர்த்தார். ஒரு தமிழ் நடிகர் என்ற மகத்தான புகழ் பெற்றிருந்தாலும், எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்கள் சமமான வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையையும் அனுபவித்தார். 

அதையும் தாண்டி மக்கள் எம்.ஜி.ஆரை மிகவும் நேசிக்க மிக முக்கிய காரணம், அவர் ஏழை மக்களின் இதய தெய்வமாக விளங்கினார். நாட்டின் மாநில முதலமைச்சர் நாற்காலியை ஆக்ரமித்த, முதல் இந்திய திரையுலக பிரமுகர் என்ற பெருமை இவரையேச் சேரும். 

எம்.ஜி.ஆரின் சாதனைகள் பல அத்தியாயங்களாக எழுதிக் கொண்டே போகக்கூடிய ஒன்று.. அவர் சிறுவனாக இருந்த போதே அவரது தந்தை இறந்துவிட்டார். அவரது தந்தையின் மறைவுக்குப் பின், குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாமல், பணம் சம்பாதிக்கும் நிர்பந்தம் ஏற்பட்டதால், இவர் நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். முதன் முதலில் நாடக்குழுவில் சேர்ந்து நடிக்க தொடங்கிய அவர்  1936ல் ‘சதிலீலாவதி’ என்ற படத்தில் துணை கதாபாத்திரமாக முதல்முறையாக நடித்தார்.

அதையடுத்து  1940களில் தான் அவருக்கு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. தமிழ் சினிமாவிலேயே இதுவரை பார்த்திராத வர்ததகரீதியான ரொமாண்டிக் மற்றும் ஆக்க்ஷன் ஹீரோ என்று அவரை உருவாக்கிய படம், ‘இராஜகுமாரி’. இது கலைஞரால் எழுதி உருவாக்கப்பட்டது. 1947ல், இராஜகுமாரி’ திரைப்படம் தமிழக திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. பின்னர், தமிழ் திரையுலகம் மூன்று தசாப்தங்களுக்கும் எம்.ஜி.ஆரை முழக்கமிட்டனர். 1956ல், எம்.ஜி.ஆர், திரையுலகில் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் உருவெடுத்தார். 

அவர் இயக்கிய முதல் படமான ‘நாடோடி மன்னன்’, தமிழ்நாட்டில் பல திரையரங்குளில் ஓடி, பெரிய வெற்றிப்பெற்று, தமிழ் ரசிகர்களின் மனதில் ஒரு அங்கீகாரத்தைப் பெற்றது.  ஒரு இயக்குனராக தனது முதல் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவர் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ மற்றும் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ ஆகிய இரண்டு படங்களை இயக்கி நடிக்கவும் செய்தார். 1971ல் வெளியான ‘ரிக்க்ஷாக்காரன்’ படத்தில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததால், எம்.ஜி.ஆருக்கு, சிறந்த நடிகருக்கான ‘தேசிய விருது’ கிடைத்தது. அதுமட்டுமல்லாமல்  சென்னை மற்றும் உலக பல்கலைக்கழகமும் அவருக்கு ‘முனைவர் பட்டம்’ வழங்கி சிறப்பித்தது. தமிழ்நாட்டின் சமுதாயத்தின் நன்மைக்காக அவருடைய பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக அவர் இறந்த பிறகு 1988ல் ‘பாரத ரத்னா விருது’ வழங்கப்பட்டது.

நடிப்புத் திறத்தால் மக்கள் செல்வாக்கை பெற்ற அவர் அரசியலில் காலடி வைத்து 
 காங்கிரஸ் கட்சியில் இருந்து பின் அக்கட்சியிலிருந்து விலகி திமுக., கட்சியில் இணைந்தார். 1962-ம் ஆண்டு முதன்முதலாக மேல் சபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். பின் 1967-ம் ஆண்டு முதன்முதலாக பரங்கிமலை தொகுதியில் எம்எல்ஏ., பதவிக்கு போட்டியிட்டார, பின் அமைச்சராகவும் பொறுப்பேற்றார். 1969-ம் ஆண்டு திமுக., வின் பொருளாளராக பதவி வகித்தார் எம்ஜிஆர்., பின்னர் திமுக.,விலிருந்து விலகி 1972-ம் ஆண்டு, அதிமுக., என்ற புதிய கட்சியை தொடங்கினார் 

அண்ணாவின் மறைவுக்குப் பின் திமுகவில் இருந்து விலகி 1972 அக்டோபர் 17ல் புதிய இயக்கமாம் அண்ணா தி.மு.க.வை ஆரம்பித்தார். எனினும் அண்ணா மறைந்த நிலையில் திமுகவின் தலைவராகவும், முதல் அமைச்சராகவும் கலைஞரை முன்னிறுத்தியதில் எம்ஜிஆருக்கு பெரும் பங்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது. 

பின்னாளில் கருத்து வேறுபாடு காரணமாக எம்.ஜி. ஆர் புதிய கட்சி ஆரம்பித்ததும் நடிகர் நாடாள முடியுமா? அவரின் திரைப்படத்தைப் போல அவருடைய கட்சியும் 100 நாட்கள் ஓடும் என்று கிண்டலும் கேலியும் பேசிய கருணாநிதியின் ஆட்சி அதிகாரத்தை எதிர்த்து பல போராட்டங்கள் நடத்தினார். கடின உழைப்பால், மக்கள் செல்வாக்கால், 1977ல் முதல்வர் பதவியை பிடித்தார்.

பின் 1980ல் 2வது முறையாக முதல்வரானார். இதன்பின் 1984 தேர்தலில் நோய்வாய்ப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., பிரச்சாரத்தில் ஈடுபட முடியாவிட்டாலும், மக்களிடம் அவர் பெற்றிருந்த செல்வாக்கால் மீண்டும் வெற்றி பெற்று 3வது முறையாக முதல்வராகி, அரசியல் வரலாற்றில் புதிய சாதனையை நிகழ்த்தினார். 1987வரை 10 ஆண்டுகள் தொடர்ந்து முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்., பதவியில் இருக்கும் போதே, உடல்நலக்குறைவால் 1987 டிச., 24ல் மறைந்தார். 

அவர் பதவியில் இருந்த காலத்தில் சத்துணவு திட்டம், இலவச வேஷ்டி சேலை போன்ற பல்வேறு மக்கள் நல திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.  எம்.ஜி.ஆர்., கொடைத்தன்மை அதிகம் மிக்கவர். இவரது கரங்கள், கொடுத்து கொடுத்து சிவந்த கரங்கள். இந்தியாவில் எங்காவது இயற்கை சீற்றம் ஏற்பட்டால், பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண நிதி எம்.ஜி.ஆரிடம் இருந்து தான் முதலில் செல்லும். 1962ல் நடந்த இந்தியா - சீனா போருக்கு, நாட்டிலேயே முதல் நபராக எம்.ஜி.ஆர்., 75 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். கர்நாடகாவின் கொல்லுாரில் உள்ள மூகாம்பிகா கோயிலுக்கு அரைக்கிலோ அளவுக்கு தங்க வால் காணிக்கை செலுத்தினார். 

எம்.ஜி.ஆர்., தமிழ் மொழி வளர்ச்சியிலும் அதிக கவனம் செலுத்தினார். 1981ல் மதுரையில் ஐந்தாவது உலக தமிழ் மாநாட்டை வெற்றிகரமாக நடத்தினார். மேலும் இவர் முதல்வரானவுடன், அது வரை பல ஆண்டுகளாக நிரப்பப்படாதிருந்த அரசவைக் கவிஞர் பதவிக்கு கவிஞர் கண்ணதாசனை நியமித்தார். 

எம்.ஜி.ஆரின் திரைப்பாடல்கள் வெற்றிக்கு கவிஞர் கண்ணதாசன், கவிஞர் முத்துலிங்கம், கவிஞர் வாலி போன்றோர்கள் மிக முக்கிய காரணம் என்றாலும், தன்திரைப்பட பாடல்களில் எத்தகைய வரிகள் வரவேண்டும் என்று கேட்டுப் கவிஞர்களிடம் உள்ள திறமையை சரியாக பயன்படுத்துவதில் எம்.ஜி.ஆர். வல்லவராக இருந்துள்ளார். சினிமா அரசியல் பொதுவாழ்வு என எத்தகைய புகழில் இருந்தபோதும் மனித நேயம் மிக்க நல் உள்ளம் கொண்டவராக அவர் இருந்துள்ளார் என்பதற்கு அவரது மக்கள் நலத்திட்டங்களே சாட்சி. அதனால்தான் நூறாண்டு கடந்தும் போற்றும் தலைவனாக விளங்குகிறார் எம்.ஜி.ஆர்.

காலங்கள் மாறலாம் காட்சிகள் மாறலாம் என்று எம்.ஜி.ஆரின் சாதனைகள் மாறாது மறையாது என்பதே உண்மை. 

0 Comments: