Tweet
 

ContactMe

Saturday, October 13, 2012

பிறப்பு

0 comments
என்னைப்பற்றி என்ன சொல்ல.. பெரிதாக இதுவரை எதுவும் செய்துவிடவில்லை. ஆனால் ஏதோ சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்குள் கனன்று கொண்டிருக்கிறது. இருப்பினும் வாழ்க்கையை அதன் போக்கில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். 1974ம் ஆண்டு தூத்துக்குடியில் பிறந்து வளர்ந்த நான் பள்ளி படிப்பை தூயமரியன்னை மேல்நிலை பள்ளியில் முடித்தது, உயர் கல்வியில் பி.ஏ. தமிழ் படிக்க ஆர்வம் கொண்டேன். எங்கள் மாவட்டத்தில் அதற்கான வாய்ப்பில்லாததால் வ.உ.சிதம்பரம் கல்லூரியில் பி.ஏ. வரலாறு படித்தேன். எம்.ஏ. தமிழ் அஞ்சல் வழியில் கற்றேன். விரும்பிய வேலை கிடைக்காமல் படித்த கல்லூரியிலேயே கிடைத்த வேலையை செய்தேன். எல்லோரையும் போல பற்பல தோல்விகள் எனக்குள்ளும் இருக்கின்றன.

தோல்விகளால் புதையுண்டு போகும் போதேல்லாம் மீண்டும் முளைப்பதற்கான வீரியம் என் எண்ணத்துக்குள் நானே விதைத்துக்கொள்கிறேன். இலக்கு நோக்கிய பயணத்தில் முழுமையாக என்னால் பயணிக்க முடியாமல் இருப்பதுதான் என் தோல்விக்கு காரணம் என்பதை நானே அறிவேன். என்றாலும் காலத்தின் கட்டாயம், சிற் சில தவிர்க்க முடியாத கடமைகள், வாழ்க்கை மீதான பயம் என்பவைதான் என் பாதை மாறுவதற்கும் காரணமாக இருக்கின்றன. அதையும் கடந்து எழுத்துலகிற்கான என் எண்ணங்களை இழுத்து பிடித்து கொண்டு அவ்வப்போது இலக்கு நோக்கிய பயணத்தை சீர் அமைக்கிறேன். அனைத்தும் அவன் செயல் என்ற நம்பிக்கையோடு தொடர்கிறது.. பணம் தேடி அலையும் வாழ்க்கை பிரயாணமும் இலக்கு நோக்கிய என் இலக்கிய பயணமும்.


என் திறமை

என் திறமைகள் பற்றி நானே பெருமிதமாய் சொல்லிக்கொள்வது அத்தனை அழகாக இருக்காது. இருப்பினும் என்னைத் தெரியாத புதுமுக நண்பர்களுக்காக சில விசயங்களை இங்கே சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். பள்ளி பருவத்தில் இருந்தே எழுத்தின் மீது தாகம் கொண்ட எனக்கு வானொலி தான் களம் அமைத்து கொடுத்தது. படிக்கும் போதே சிறுகதை, கவிதை என எழுத தொடங்கிய நான், திருநெல்வேலி, தூத்துக்குடி, இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் என பல்வேறு வானொலிகளில் எனது படைப்புக்களை வழங்கியுள்ளேன் என்றாலும் வாழ்க்கை போராட்டத்தில் சிக்கி எழுத்துலகை விட்டு முற்றிலுமாக தொலைந்து போவேனோ என்று எண்ணும் போதெல்லாம் எங்கிருந்தோ ஒரு கவிதை வந்து என்னை தட்டி எழுப்பிவிடும். அடா உயிர்த்திருக்கும் என் திறமைக்கு நானே ஏன் சவக்குழி தேட வேண்டும் என்று மீண்டும் விழித்து எழுந்து எழுத தொடங்குவேன்.. இருக்கும் திறமைக்கு களம் தேடி களம் தேடி பல முறை நானே தொலைந்தாலும்.. எழுத்துக்கும் எனக்கும் உள்ள பிணைப்புச் சங்கிலி அறுந்து விடாமல் இன்று வரை என்னை உயிர்ப்போடு இருக்க செய்வது, இருப்பதாக நான் நம்பும் என் திறமையும், என்றாவது வெல்வோம் என்ற நம்பிக்கையும் தான்.

அனுபவம்:

நாம் வாழும் சூழலில் நமக்கு ஏற்படுகிற நிகழ்வுகள் அதன் மூலம் நாம் கற்றுக்கொள்கிற பாடம் தான் அனுபவம் என்று நான் கருதுகிறேன்.  நன்மை தீமை கலந்த இந்த வாழ்க்கையில், இறை நம்பிக்கையோடு வாழுகிறவர்களுக்கு ஏற்படும் தீமையில் கூட நன்மையை உணரமுடியும் என்பதே நான் அறிந்த உணமை. பத்திரிகை, எழுத்து மற்றும் ஊடகம் சார்ந்து வாழும் எனக்கு தொழில், துறை சார்ந்த அனுபவம் என்பது ஓரளவு நிரம்ப இருக்கிறது என்றே சொல்ல வேண்டும். தூத்துக்குடி வானொலியில் எனது ஊடகப் பணியை தொடங்கிய நான் பல பாதைகள் கடந்து தமிழகத்தின் நம்பர் ஒன் நாளிதழின் சென்னை பதிப்பகத்தில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன். 
   
    அனுபவம் மட்டுமே ஒருவனை பெரிய மனிதனாக அடையாளப்படுத்திவிடாது என்பதற்கு சிறந்த உதாரணம் தான் நான். நம்மை அடையாளப்படுத்துவது நம் திறமை என்பது ஒருபக்கம் இருந்தாலும்.. அதை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பும் மிக முக்கியம் அல்லவா.. அப்படி ஒரு வாய்ப்பை தேடித்தான் எனது பயணம் நீள்கிறது.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...